Friday, December 14, 2018

அக்பர் - பைராம்கான் - Vijay Bhaskarvijay

அக்பர் - பைராம்கான்
இடையே நடந்த Mind Game ,
உளவியலில் ஆர்வமுடையவர்களை ஈர்க்கும் விஷயமாக நிச்சயம் இருக்கும்.
அக்பரின் அப்பாவான மன்னர் ஹிமாயூன் வெற்றி பெற உழைத்தவர் பைராம்கான்.
அக்பரை மிகச்சிறுவனாக இருக்கும் போதே பைராம்கானுக்கு தெரியும்.
அக்பரையும் பாதுகாத்தவர் பைராம்கான்தான். மிக சிறுவயதிலேயே மாமன்னர் பொறுப்பை அக்பர் ஏற்ற போது அக்பருக்கான மரியாதையை பெற்றுத் தருவதில் பைராம்கான் குறியாய் இருந்தார்.
பைராம்கான் அக்பருக்கு நடத்திய முடிசூட்டு விழாவில் அனைத்து மாகாண தளபதிகளும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
அதில் ஒருவர் மட்டும் அக்பர் மாமன்னரானதை விரும்பவில்லை போலும்.
அவர் “நான் ஹிமாயூன் மன்னர் இறந்த துக்கத்தில் இருக்கிறேன். நான் அக்பர் முடிசூட்டு விழாவுக்கு வரவில்லை. அதற்கு பதிலாக ஹிமாயூன் கல்லறைகு போகிறேன்” என்று விழாவை தவிர்த்தார்.
பைராம்கான் விடவில்லை அவரை கட்டி இழுத்து வந்து “மாமன்னர் அக்பர் முடிசூட்டு விழாவுக்கு வராதது ராஜதுரோகம்” என்று தண்டனை கொடுத்தார்.
அந்த தண்டனைதான் அனைத்து மாகாண நிர்வாகிகளும் அக்பரைக் கண்டு பயப்படும், மரியாதை கொடுக்கும் சம்பவமாக இருந்தது.
அக்பரை மாமன்னராக ஏற்றுக் கொண்டார்கள்.
சர்வாதிகாரத்தில் இந்த அடக்குமுறை மிக முக்கியமான யுத்தி. சர்வாதிகாரிக்கு எதிராக சிறிய கல் விழும் போதே அதை வெறித்தனமாக அடக்குதல். அக்கால மன்னர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள் என்பதால் அக்பரின் மரியாதையை பைராம்கான் அந்த அடக்குதல் உளவியல் வைத்தே காப்பாற்றினார்.

Image result for akbar
முதன் முதலில் அக்பரை மெலிதாக மிக மெலிதாக அவமானப்படுத்திய தளபதியை தண்டிப்பதன் மூலம் பைராம்கான் மற்றவர்களுக்கு அக்பரின் வானாளவிய சக்தியை புரிய வைத்தார்.
ஆனால் அக்பரின் மேல் பைராம்கானுக்கு சிறு அலட்சியம் இருந்தது. மற்றவர்கள் அக்பரை மதிக்க வேண்டும் என்று ஆவேசமாய் இருந்த பைராம்கான் ஆழ்மனதில் “நம்மால்தான் இச்சிறுவன் ஆட்சி செய்கிறான்” என்ற எண்ணம் இருந்தது.
அக்பரைக் கேட்காமலேயே சில மரண தண்டனைகள் கொடுக்கிறார் பைராம்கான்.
இப்போது அக்பரின் உளவியலாக அவருக்கு பைராம்கான் மேல்
- அன்பு இருக்கிறது.
- மரியாதை அதிகம் இருக்கிறது.
- பயமும் இருக்கிறது.
- நம்மை சுதந்திரமாக விடவில்லை என்ற எரிச்சலும் இருக்கிறது.
இதில்லாமல் அக்பரின் சிறுவயதில் அக்பரின் அத்தை மகள் சலீமாவை பைராம்கான் திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த திருமணத்தில் அக்பருக்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனால் ஹிமாயூன் இல்லாத சமயத்தில் பைராம்கான் கட்டுப்பாட்டில் இருந்த் அக்பரால் எதையும் சொல்ல முடியவில்லை.
ஆனால் அவருக்கு பைராம்கான் தன் அத்தைப் பெண் சலீமாவை திருமணம் செய்தது பிடிக்கவில்லை.
அக்பர் போர் பயிற்சிகளை நன்றாக பயில வேண்டும் என்பதில் பைராம்கான் கண்டிப்பாக இருக்கிறார். இது அக்பர் மனதில் சிறுவனுக்கே உள்ள அடக்குமுறைக்கு எதிரான எண்ணத்தையும் கோபத்தையும் வளர்க்கிறது.
அக்பருக்கு மிகவும் பிடித்த யானை ஏறுதலை பைராம்கான் பாதுகாப்பில்லை என்று தடுக்கிறார். அக்பர் கடுப்பாகி பைராம்கான் ஒய்வெடுக்கும் மாளிகை அருகிலெயே சென்று வேண்டுமென்றே யானைகளை பிளிரவிட்டு பயிற்சி எடுக்கிறார். இது பைராம்கானுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது.
இன்னொரு பக்கம் அக்பரின் வளர்ப்புத்தாய் மாஹம் அனகாவுக்கும் பைராம்கானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அக்பர் சிக்கித் தவித்தார்.
குறிப்பிட்ட சமயத்தில் அக்பரின் ஆழ்மனது பைராம்கானின் அதிகாரத்தை மீற ஆசை கொண்டிருக்கலாம். அதனாலேயே கூட அவர் மாஹம் அன்காவின் பேச்சை அதிகம் நம்பி இருக்கலாம்.
பைராம்கான் படகில் செல்லும் போது யானை ஒன்று கரையில் குளிக்கும் போது பயமுறுத்தி பைராம்கானை தள்ளி விடுகிறது. படகில் விழுந்த பைராம்கான் பதற்றமாகிறார்.
அக்பரோ யானைப்பாகனை இழுத்து வரச்சொல்லி பைராம்கானிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். இதைப் பார்த்த பைராம்கான் சினம் கொண்டு யானைப்பாகனை அக்பரை வகை செய்யாமல் கண்டிக்கிறார்.
தன்னை கான் பாபா மதிக்கவில்லை என்று அக்பர் மேலும் கடுப்பாகிறார்.
குறிப்பிட்ட சமயத்தில் பைராம்கான் மேலுள்ள அதிருப்தி அதிகமாகி அக்பர் அவரை அழைத்து அரசியல் நிர்வாகத்தை விட்டு மெக்கா போக சொல்கிறார்.
பைராம்கான் தன் பரிவாரத்துடன் போகும் போது கூட அவர் கலவரம் செய்வார் என்று அவரை தன் படையை வைத்து ரகசியமாக கண்காணிக்கிறார்.
பைராம்கான் அக்பருக்கு எதிராக இயங்கும் எண்ணமே கிடையாது.
ஆனால் தன் நல் எண்ணம் புரியாமல் அக்பர் தன் மேலேயே உளவு பார்க்க முறியடிக்க படையை அனுப்பி வைத்தது பற்றி எரிச்சலாகி “இதெல்லாம் மாஹம் அனகா வேலைதான். அவளை நான் வெல்வேன்” என்று குரல் எழுப்ப அக்பரின் படைகள் பைராம்கானை முறியடித்து பைராம்கானை கைது செய்து அக்பரிடம் அழைத்து வருகிறார்கள்.
பைராம்கான் அக்பரின் காலில் விழுந்து கண்ணீருடன் அவர் காலில் முத்தமிடுகிறார். அக்பர் “கான் பாபா” என்று அன்போடு அழைத்து தன் அருகே அமர வைத்து கண்ணீரை துடைத்து விடுகிறார்.
மேலோட்டமாய் பார்க்க அதொரு செண்டிமெண்ட் காட்சி மாதிரி தெரிந்தாலும் அதில் அக்பர் உயர்ந்தவர் என்பதை பைராம்கான் ஏற்றுக் கொண்டது பற்றி அக்பர் அடைந்த மகிழ்ச்சியே தெரிகிறது.
அதை பெரிய தவறாக சொல்ல முடியாது. 18 வயதுவரை அக்பர் பைராம்கானை மதிக்கவே செய்தார்.
அக்பரிடம் சொல்லிக் கொண்டு பைராம்கான் மனைவி குழந்தையோடு பயணம் செல்கிறார். பயணத்தில் கொள்ளையர்களால் கொல்லப்படுகிறார்.
பைராம்கானின் மனைவி சலிமா தன் சிறுகுழந்தையோடு அக்பரை பார்க்க மெலிந்து ஏழையாய் வருகிறார்.
தன் அத்தைப் பெண்ணின் நிலைமை கண்டு வருந்துகிறார் அக்பர்.
சலீமாவை அக்பரே திருமணம் செய்து கொள்கிறார். பைராம்கானின் மகன் பின்னால் வளர்ந்து அக்பரின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருக்கிறான்.
அக்பருக்கு தன் நடுக்கம் பற்றி தெரிந்த ஒரே உயிரான பைராம்கான் மேல் ஒரு எரிச்சல்.
பைராம்கானுக்கு “இவன் பொடியாள்” என்ற ஆழ்மன எண்ணத்தை அவரளவில் கடக்க முடியவில்லை.
சலீமாவை பைராம்கான் திருமணம் செய்தது அக்பருக்கு பிடிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. ஒருவேளை
இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்பது வரலாற்று யூகம்தான்.
யானைப்பாகனை அக்பரே கொல்லாமல் விட்டது பைராம்கான் மனதை பாதித்திருக்க வேண்டும். “நாம் அக்பரின் உணர்வை நுணுக்கமாக மதித்தது மாதிரி அவர் நம்மை மதிக்கவில்லையே “ என்று பைராம்கான் நினைத்திருக்கலாம்.
உட்சபட்ச அதிகாரத்தை பெறும் அனைவர் வாழ்க்கையிலும் ஒரு பைராம்கான் இருப்பார்.
அக்பர் கழட்டிவிட்டது மாதிரியே பைராம்கானை அவர்களும் கழட்டி
விட்டிருப்பார்கள். விடுவார்கள்.
அக்பர் - பைராம்கான் Mind Game என்பது தனிப்பட்ட சம்பவங்களில் கோர்ப்பு மட்டும் அல்ல.
அவை ஒரு அற்புதமான உளவியல் மாடல்கள்.
அங்கே
அக்பராலும் எதுவும் செய்ய முடியாது.
பைராம்கானாலும் எதுவும் செய்ய முடியாது.
அது அப்படியே, அப்படி அப்படியே நடக்கும்...
இருந்தாலும் தான் வளர்த்த சிறுவனின் காலிலேயே அழுதுகொண்டே முத்தமிட்டு மன்னிப்பு கேட்ட பைராம்கானின் முகபாவனை நினைத்தால் கஷ்டமாய்தான் இருக்கிறது.
அக்பருக்கும் அது மனவேதனையை கொடுத்திருக்கும்.
அதே சமயம் ”அதிகார உணர்வு” என்றும் வீரிய உணர்வு அதை வேகமாக கடந்தும் போயிருக்கும்.
கடந்து போனால்தான் அதிகாரத்தை அடையமுடியும் என்பதை பதினெட்டு வயது சிறுவனான அக்பர்
உணர்ந்த காரணத்தால்தான்
அவரால் மாமன்னராய் மொத்த இந்தியாவையே
கட்டி ஆட்சி செய்ய முடிந்தது...

0 comments:

Post a Comment