Monday, December 10, 2018

சமூக சீர்திருத்தமே நமது மரபு - சூர்யா சேவியர்

சமூக சீர்திருத்தமே நமது மரபு
-தோழர். பினராயி விஜயன்
(16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து....)
சமூக சீர்திருத்த மரபு தான் நமது மகத்தான மரபு...
நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத் தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்டவை. அதனால்த்தான் “இது ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்”, என்று விவேகானந்தரால் விமர்சிக்கப்பட்ட இந்த மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாக முன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கே நமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், நமது மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எந்த காலகட்டங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அந்த காலகட்டங்களில் எல்லாம் அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கி இருக்கிறார்கள். அந்த பிரிவினரில் பிற்போக்கு சக்திகள் மட்டும் பங்கெடுக்கவில்லை.
சமூக சீர்திருத்தங்கள் மூலம், உரிமைகள் அடைய வேண்டிய, நன்மைகளைப் பெற வேண்டிய, பலனடைய வேண்டிய பிரிவினர் யாரோ அவர்களை, அன்றைய நம்பிக்கைகளின், சம்பிரதாயங்களின் சக்திகளைப் பயன்படுத்தி சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு எதிராக அணி வகுக்கும்படி செய்ய பிற்போக்கு சக்திகளால் முடிந்தது.
நமது நாடு பார்த்த மிகக் கொடூரமான சடங்கு, சதி என்ற ஒன்றாகும். கணவர் இறந்துவிட்டால், மனைவியை கணவரின் அந்த சிதையில் தள்ளிவிடும் வழக்கம்....ஒரு மூட நம்பிக்கை. அந்த சதி என்ற வழக்கத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. அது சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலானால் மட்டுமே நடந்தது.
நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், அன்றைய கணக்குப்படி 1813 முதல் 1829 வரையிலான காலகட்டத்தில் 8135 பெண்கள் சிதையில் குதித்து உயிரிழந்தார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்ந்திருந்தால், எத்தனை ஆயிரம், எத்தனை லட்சமாகியிருக்கும் என்று கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம்...என்ன ஆகியிருக்கும் நமது நாட்டின் நிலைமை? ஆனால் இந்த சடங்கின், மூடநம்பிக்கையின் பெயரில், இந்த வழக்கத்திற்கெதிராக சட்டம் இயற்றப்பட்ட பிறகும், பெண்கள் இதுபோன்று சிதையில் குதிக்க முயன்றார்கள்....சிலர் குதிக்கவும் செய்தார்கள். அதற்கெதிராக பெரிய எதிர்ப்புகளும் கிளம்பின.
இங்கே இ.எம்.எஸ், வி.டி, எம்.ஆர்.ஜி, பிரேம்ஜி போன்றவர்கள் எல்லாம் அன்றைய பிராமண சமுதாயத்திலிருந்த தவறான வழக்கங்களுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டகளைத் தொடங்கினார்கள். அதன் பகுதியாக விதவை மறுமணம் சாத்தியமாகும் நிலை வந்தது. அதுபோல, அன்றைய சமூகத்தில் இருந்த வித்தியாசமான சூழலின் அடிப்படையில் இளம்பெண்களை, அதாவது பருவமடைவதற்கு முன்பாகவே, சிறுமிகளை படுகிழவர்களுக்கு மணம் முடித்து வந்தார்கள். அந்த சிறுமிகள் பருவமடைவதற்கு முன்பே அந்த கிழவனின் கதை முடிந்துவிடும். பின்பு அந்தச் சிறுமி தலை மொட்டையடிக்கப்பட்டு இருட்டறையில் அடைந்து கிடக்கவேண்டும். அதற்கெதிராக முன்பு குறிப்பிடப்பட்டவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தத் துணிந்த போது அவர்களை ஜாதி விலக்கம் செய்ய முடிவெடுத்தார்கள்....பயமுறுத்தப்பட்டார்கள்...பிற்போக்காளர்களின் கடுமையான எதிர்ப்பும் இருந்தது.
நமது நாட்டில் சில இடங்களில் மனிதப்பலி கொடுக்கும் முறை இருந்தது. பின்னர், அது மிருகப்பலியாக மாற்றப்பட்டது. மிருக பலியும் செய்யக்கூடாது என்ற நிலை வந்தபோது தான் மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்து கலக்கி இரத்தம் போன்ற திரவத்தை உருவாக்கி அடையாளரீதியாக பலியிடும் முறை வந்தது.
இதெல்லாம் சடங்குகளில் ஏற்பட்ட மாற்றங்களாகும். நமது நாட்டில், நமது மாநிலத்தில் என்னவெல்லாம் வகையிலான மாற்றங்கள்? வழக்கங்கள் என்பது மரபுவழியாக கடைபிடிக்கப்படுபவை ஆகும். அது காலகட்டங்கள் தோறும் மாற்றமடையும். ஒரு காலத்தில் இருப்பது பின்வரும் காலங்களில் இருக்கவேண்டும் என்பதில்லை.
முன்பெல்லாம் கோவிலில் நுழைவது என்றால், கோவில் குளத்தில் நன்றாகக் குளித்து, அந்த ஈரத்துணியுடன் தான் செல்லவேண்டும். இப்போது, எல்லோரும் அப்படியா கோவிலுக்குள் நுழைகிறார்கள். உடலை தங்கள் வசதிக்கேற்ப சுத்தம் செய்துகொள்ளுகிறார்கள். ஆனால், கோவிலில் அப்படியே தானே நுழைகிறார்கள்?
முன்பு பெண்களின் விஷயத்தில் என்னவெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தது? மாதவிடாய் வந்துவிட்டால்...அந்தப் பெண்களுக்கு வீட்டில் கூட இருக்கமுடியாது. வசிக்குமிடத்திலிருந்து வெளியே செல்ல முடியாது. வீட்டிலிருந்து தனியே வேறொரு இடத்தில் அதற்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் தங்கிக்கொள்ள வேண்டும்....ஆனால் இப்போது?
எல்லாம் மாற்றங்கள் அல்லவா..?நமது கண் முன்னே ஏற்பட்ட மாற்றங்கள் அல்லவா?

முன்காலத்தில் பிரசவம் நடந்தால் ‘வாலாய்மை” (பிரசவ நேரத்தில் அசுத்தம் என்ற பெயரில் கடைப்பிடிக்கப் பட்ட தீட்டு). மரணம் நடந்தால்...குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் “புலை” (இறப்பினால் ஏற்படும் தீட்டு)..எத்தனை நாட்கள் அதற்கு...?ஆனால் இப்போதோ மரணம் நடந்து சவ அடக்கம் முடிந்தவுடன், ஒருவர் கூறுவார்,”எல்லா காரியங்களும் இத்துடன் முடிந்துவிட்டது. கலைந்து செல்பவர்கள் கலைந்து செல்லலாம்.”என்று.... எல்லோரும் கலைந்து செல்கிறார்கள். இதுதானே சடங்குகளின் நிலைமை?
மாற்றங்கள் நிகழும் போக்கை நாம் பார்க்கவேண்டும் அல்லவா? இத்தகைய மாற்றங்கள், முன்பு சொன்ன சமூக சீர்திருத்த நாயகர்களின் தலையீட்டினால் ஏற்பட்டது தானே?

Image may contain: 1 person
இங்கே முன்பு மார்பு மறைக்க உரிமை இல்லை அல்லவா? அவ்வாறு மார்பு மறைக்க உரிமையில்லாத காலகட்டத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படவில்லையா? அவ்வாறு மார்பு மறைத்து, கோவிலில் நுழையும் உரிமை கிடைத்த பிறகும் கூட அந்த உரிமையை சீர்குலைப்பதற்கான போராட்டங்கள் நடக்கவில்லையா இங்கே..? பெண்களே கூட அதற்கெதிராக களமிறங்கினார்கள்...அதோடு மார்பு மறைத்தவர்களின் மாராப்பை, மார்பு மறைக்காத பெண்களே கிழித்தெறியத் துணிந்தார்கள்.
இதெல்லாம் நமது மாநிலத்தின் வரலாறல்லவா? ஆனால், நாம் அங்கேயே நின்று கொண்டிருக்கிறோமா? ‘எங்களுக்கு மார்பை மறைக்க வேண்டாம்’ என்று கூறிய பெண்களுடனா இந்த நாடு நின்றது...? காலம் அவர்களுடனா நின்றது...?காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப சடங்குகளும் வழக்கங்களும் மாறுவதில்லையா?
முன்பு, இங்கே பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது பெரிய மாற்றமாக இருக்கவில்லையா? நமது சமூகத்தின் முன்னேறிய பகுதியினர் அதனை ஏற்றுக்கொண்டார்களா? பிற்போக்கு சக்திகள் அதற்கெதிராக நிற்கவில்லையா? சுருக்கமாகச் சொன்னால், என்னென்ன சமூக சீர்திருத்த இயக்கங்கள் நடந்துள்ளனவோ அந்த கட்டங்களில் எல்லாம் அதற்கெதிராக கடுமையான எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
முன்பிருந்த நிலை என்னவாக இருந்தது? பிராமணர்களிடமிருந்து 64 அடி தூரத்தில் பறையர் நிற்க வேண்டும். 54 அடி தூரத்தில் புலையர் நிற்க வேண்டும். 36 அடி தூரத்தில் ஈழவர் நிற்க வேண்டும். ஈழவர்களிடத்திலும் தீண்டாமை வழக்கமிருந்தது. ஈழவர்களிடமிருந்து 30 அடி தூரத்தில் புலையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிற்க வேண்டும். என்னவெல்லாம் தவறான பழக்கவழக்கங்கள் நமது மாநிலத்தில் நடைமுறையில் இருந்தன? இதுபோன்ற சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலனாகத்தானே, இவையெல்லாம் மாறின? அதற்கு உறுதியான தொடர்ச்சிகளும் ஏற்பட்டன.
நமது மாநிலத்தில் மேலோங்கி வந்த பலவேறு இயக்கங்கள் விவசாயிகளின் இயக்கம், தொழிலாளர்களின் இயக்கம், இடதுசாரி இயக்கம் போன்றவற்றின் தலையீடுகள், இந்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு முன்னேறிச் சென்றன. அதுதானே இந்த மாநிலத்தை மாற்றின? இந்த மாநிலத்தின் இதுபோன்ற மாற்றங்களை உள்வாங்க முடியாத ஒரு நிலை இப்பொழுதும் உள்ளன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள் போன்றவர்களின் வரிசையில் உட்படுபவர்கள் தான் அய்யா வைகுண்டரும் பொய்கையில் குமார குருதேவனும் எல்லாம். இவர்களால், இந்த மாநிலத்தில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகள் நீங்கியதால் வந்த ஒளி தான் இப்போது கேரளத்தில் வீசுகின்றது.
நாம் அதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் எல்லோரும் ‘சடங்குகளை மீறுவதற்காகத்தான் நிலைபாடு கொண்டிருந்தார்கள்’ என்பதைத் தான். ஸ்ரீ நாராயண குரு அருவிப்புறத்தில் சிவபிரதிஷ்டை நடத்திய சம்பவம்...உண்மையில் அது ஒரு சடங்கு மீறல் அல்லவா? அப்போது “உங்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை?” என்று அவரிடம் கேட்டார்கள் அல்லவா? அதற்கு குரு என்ன பதில் கூறினார்...? “நாம் பிரதிஷ்டித்தது பிராமணர்களின் சிவனை அல்ல...நமது சிவனைத் தான் நாம் பிரதிஷ்டித்துள்ளோம்” அங்கு சடங்கு மீறல் தான் நடத்தப்பட்டது.
அதன்பிறகு, அதே குரு. “இனி கோவில்களையல்ல...பள்ளிக்கூடங்களைக் கட்டுவது தான் மக்களுக்கான தேவை” என்று தானே சொன்னார்.....அங்கேயும் சடங்கு மீறல்கள் தானே தென்படுகிறது? அப்படியென்றால், சடங்குகள் மீறப்பட வேண்டியது என்று தான் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.
அய்யன்காளியின் வில்வண்டிப் போராட்டத்தைப் பாருங்கள்...பொட்டு வைத்து, பட்டுத் தலைபாகை வைத்து, கோட்டு அணிந்து....அன்று அதற்கெல்லாம் உரிமை இருந்ததா? பொட்டு வைக்க உரிமை இருந்ததா? பட்டுத் தலைப்பாகை வைக்க உரிமை இருந்ததா? கோட்டு அணிய உரிமை இருந்ததா? அப்படியென்றால், உரிமையில்லை என்று சொன்னவர்களின் சட்டத்தோடு சேர்ந்து நிற்காமல், ‘எங்களுக்கு உரிமை உண்டு’ என்று கூறி, அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தான் நின்றார்கள்.
கடந்த வருடம் என்று தான் நினைக்கிறேன்...
இங்குள்ள ஊரூட்டம்பலம் ஆரம்பப்பள்ளிக்குச் சென்ற போது, அங்கே பாதி எரிந்துபோன பெஞ்சை நான் பார்க்க நேர்ந்தது. அது...எந்த பெஞ்சு தெரியுமா? பஞ்சமி என்ற தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுமியைப் பள்ளியில் அமரவிடவில்லை என்று கேள்விப்பட்ட போது, அந்த சிறுமியையும் அழைத்துக்கொண்டு, அய்யன்காளி தட்டிக்கேட்க வருகிறார் என்று கேள்விப்பட்ட மேல்ஜாதியினர் அந்த பள்ளிக்கே தீ வைத்தார்கள். அதில் முற்றும் எரிந்து போன பள்ளியிலிருந்து, எஞ்சிய இந்த எரிந்த, துண்டு பெஞ்சு மட்டும் கிடைத்தது. அதைத்தான் நான் அங்கு காண நேர்ந்தது. அவ்வாறு நமது மாநிலத்தில் வெவ்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. அப்படித்தான், நாம் இன்று காணும் கேரளம் உருவானது.
அத்தகைய போராட்டங்களில்...
அடையாளத்திற்காக மேல்ஜாதியினரால் அணிய வைக்கப்பட்ட கல் மாலையை அறுத்தெறிய நடத்தப்பட்ட போராட்டம்...
உடன் அமர்ந்து படிக்க நடத்தப்பட்ட போராட்டம்...
படித்த பிறகு...
வேலைகிடைப்பதற்கான போராட்டம்...
பாதையில் நடப்பதற்கான உரிமை கேட்டு நடத்தப்பட்ட போராட்டம்...
கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான போராட்டம்...
இத்தகைய வெவ்வேறு போராட்டங்கள் மூலம் தான், நாம் இன்று காணும் கேரளம் உருவானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கே பாரதிய ஜனதா கட்சி நாட்டையாளும் கட்சியல்லவா? அக்கட்சியின் நிலைபாட்டை தனியாக நாம் பரிசீலிக்கவேண்டும். மகாராஷ்டிராவில் சனி தேவனின் ஒரு திருத்தலம் உள்ளது....ஒரு கோவில். அங்கு சனிதேவன் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். சனி சிக்னாபூர் என்பது தான் அந்தக் கோவிலின் பெயர். அந்தக் கோவிலில் எக்காலத்திலும் பெண்கள் நுழைந்ததில்லை. பெண்கள் அக்கோவிலுக்குள் செல்லவே கூடாதாம். சனிதேவன் பெண்களைப் பார்க்கவே கூடாது என்பதுதான் அங்குள்ள நிலைமை. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் 'பெண்களுக்கு கோவிலுக்குள் செல்ல உரிமை உண்டு' என்று தீர்ப்பளித்தது. அங்கே பாஜக அரசு தான் உள்ளது. அவர்கள் அந்தத் தீர்ப்பை அமுல்ப் படுத்தினார்கள். இப்போது பெண்கள் அந்தக் கோவிலுக்குச் செல்கிறார்கள். அப்படியென்றால், பாஜக ஆளும் மாநிலத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தலாம். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில், இடது ஜனநாயக முன்னணி ஆளும் மாநிலத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே வந்தாலும் அமுல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். இது என்ன மாதிரியான இரட்டை நிலைப்பாடு?
அங்கே அதுபோலவே உச்சநீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பு...மும்பைக்கு அருகே ஹாஜி அலி தர்கா...அங்கே பெண்களை செல்ல அனுமதிக்கவேண்டுமென்று மனு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், நீதிமன்றம் பெண்கள் அந்த மசூதியில் செல்ல அனுமதித்தது. அந்த மசூதியில் பெண்கள் செல்கிறார்கள். இதெல்லாம் மகாராஷ்டிராவில் நடந்த விஷயங்களாகும்.
அதோடு இடதுமுன்னணி அரசு சமூக சீர்திருத்த பாரம்பரியத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டு வருகிறது. நமது கோவில்களில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பூசாரிகள் ஆகாலாம். அது, நமது தேசமே பெரும் ஆதரவளித்து வரவேற்ற ஒன்றாகும். சாதாரணமாக எல்லோரும் பூசாரிகள் ஆகிவிட முடியாது என்பது போன்ற, மேல்ஜாதி ஆதிக்கம் நிறைந்த விதிமுறைகளை எழுதியவர்கள் உட்பட எல்லோரும், “எல்லா ஆகமங்களையும் கற்றுத் தேர்ந்தால் பூசாரி ஆவதற்கு தடையேதுமில்லை” என்ற நிலைபாட்டை முன்வைத்தபோது ஏற்றுக்கொண்டார்கள். அதுபோலவே தான், அறநிலையத்துறை ஊழியர்களின் நியமனத்தில் பட்டியலினத்தவர்கள், மலைவாழ் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தினோம். உயர்வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளவர்களுக்கு, அறநிலையத்துறை ஊழியர் நியமனத்தில் தனியாக இடஒதுக்கீடு செய்யும் ஒரு முறையும் மாநில அரசு அமுல்ப்படுத்தியுள்ளது. இதெல்லாம், சமூக சீர்திருத்த மரபின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.
இங்கே காங்கிரசார் எண்ணிப்பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கட்சிக் கொடியின்றி பாஜக தலைமை தாங்கும் போராட்டத்தில் பங்கேற்றால், நீங்கள் காங்கிரஸ் அல்ல என்று ஆகிவிடுவீர்களா..? ஆமாம்...காங்கிரஸ் இல்லையென்று ஆகிவிடும் நிலை உங்களுக்கு நிச்சயம் ஏற்படும்....நாளை அவர்கள் பாஜக ஆகிவிடுவார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
காங்கிரசுடன் இணைந்து நிற்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது...அது அரசியலமைப்புச்சட்டம் பற்றிய ஆர்.எஸ்.எஸ்-ன் பார்வை ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்க்க வேண்டுமென்று தான் ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அதை அவர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இந்திய பாராளுமன்றத்திலேயே கூறிவிட்டார்கள். ஆனால் இப்போது ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த வாதத்தை காங்கிரசாரும் உயர்த்திப்பிடிக்கிறார்கள். அது, “எல்லாவற்றையும் விட உயர்ந்தது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கையே முக்கியம்....அரசியலமைப்புச்சட்டத்தின் மதிப்புமிக்க அம்சங்களை விட சட்டங்களைவிட நம்பிக்கையே முக்கியம்” என்பதாகும். இந்த வாதத்துடன் இணைந்து நிற்பவர்கள் அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை சரியான விதத்தில் புரிந்து கொண்டிருக்கிறார்களா?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த வாதத்துடன் அணிதிரள்வதாக செய்திகள் வருகின்றன. முஸ்லீம் லீக் தலைவர்களும் உணர்ச்சிவசப்பட்டு இந்த வாதத்துடன் அணிவகுக்கிறார்கள். நீங்கள் இந்த வாதத்தை கொஞ்சம் விரிவுபடுத்திப் பாருங்கள். பாபர் மசூதி விவகாரத்தில்...எங்கே போய் முடியும்? நம்பிக்கைதான் முக்கியம் எனில், இராமர் கோவில்தான் அது என்று கூறும் நம்பிக்கையோடு அல்லவா இணைந்து நின்றிருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-ம் அந்த வாதத்தோடு தான்...பாஜக-வும் அந்த வாதத்தோடு தான்... காங்கிரசும் மிகச்சரியாக அந்த வாதத்தோடு தான், அக்காலத்தில் நின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்...இந்த வாதத்தின் பின்னால் உள்ள ஆபத்து என்னவென்று சரியான முறையில் யார் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? நமது நாட்டில், சங் பரிவாரங்கள் உரிமை கொண்டாடுவது ஒரு பாபர் மசூதியின் மீது மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள ஏராளமான வழிபாட்டுத்தலங்கள் மீது அவர்களின் உரிமைவாதம் இருக்கிறது. இது எங்களது ஆராதனாலயம் என்று கூறுகின்ற உரிமைவாதத்தை முன்வைக்கிறார்கள்.
எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையிலானது என்றால் நாளைய எதிர்காலம் என்னவாகும் என்று...நிதானமாக சிந்தித்தால் போதும்...சிந்திக்க முடிந்தால்...இவ்வாறு நம்பிக்கையின்பால் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பதை மட்டும் நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்...
நாம் கவனமாகப் பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், எது அவர்களின் குறிக்கோள் என்பதே....அரசைத் திட்டுவதோ...இடதுஜனநாயக முன்னணியைத் திட்டுவதோ அல்ல...மாறாக அவர்களின் உண்மையான நோக்கம் கேரளத்தின் மதசார்பற்ற சிந்தனையைத் தகர்ப்பதே ஆகும். அதை அனுமதிக்க வேண்டுமா? என்பதே நமக்கு முன் உள்ள கேள்வி. அதை அனுமதிக்கவே முடியாது. நாம் உறுதியாக இத்தகைய முன்னெடுப்புகளை எதிர்த்து நின்று போராடியிருக்கிறோம். மதசார்பற்ற சிந்தனைகளை எதிர்க்கவும், மதசார்பற்ற எண்ணங்களை தகர்க்கவும் நடத்தப்படும் முயற்சிகளை, நாம் எல்லோரும் இணைந்து முறியடிக்க வேண்டும். மதநம்பிக்கையாளர்கள் உட்பட உள்ள அனைவரும், அதற்காக அணிதிரண்டு களத்திலிறங்கிப் போராட வேண்டுமென்று இந்நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
வாழ்த்துகள்...!

0 comments:

Post a Comment