Sunday, January 20, 2019

மூங்கில்வனம் 5 - சூர்யா சேவியர்

தாமிரபரணி என்று தான் இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கு புராணங்கள்,சங்க இலக்கியங்கள்,ஆய்வுகள் என பலதும் பல தகவல்களைக் கூறுகிறது.
தாமிரபரணியை தாமிரவருணி என்று சிலர் அழைக்கிறார்கள்.வருண பகவான் மழையைப் பொழிவதால் தாமிரவருணி என்கிறார்கள். இது ஏற்புடையதல்ல. ஏனெனில் எந்தப் பகவானும் மழையைப் பொழிவிப்பதில்லை என்பது விஞ்ஞானம்.
வியாசரின் மகாபாரதம்,வால்மீகி இராமாயணம்,காளிதாசரின் ரகுவம்சம் ஆகிய நூல்கள் தாமிரபரணி என்றும் தாமிரபருணி என்றும் கூறுகிறது.
சங்க இலக்கியங்களில் தாமிரபரணி தன் பொருநை,பொருநை என்று கூறுகிறது. தன் பொருநல் என்கிறார் நம்மாழ்வார். சிலப்பதிகாரம் சேரனை பொருநைப் பொறையன் எனப் போற்றிப் பாடுகிறது. சேக்கிழாரின் பெரியபுராணம் பாண்டிய நாட்டை பொருநைப் புனல் நாடு என்கிறது.
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருந்தி என்கிறார் கம்பர். அழகர் கருணைப் போல பொருநை பெருகி வரும் அழகைப் பாரும் பள்ளீரே என்கிறது முக்கூடற்பள்ளு.தமிழ் கண்டது வையையும் பொருநையும் என்கிறார் பாரதியார்.1013 இராஜராஜன் கல்வெட்டில் தன் பொருந்தம் என்று கூறுகிறது.
திருநெல்வேலி வரலாற்றை எழுதிய ஆய்வாளர் பிஷப் கால்டுவெல் கிமு 3 ம் நூற்றாண்டுவரை இலங்கை தீவும் தம்பரப் பன்னி, தாம்ர பன்னெ,தாம்ப பன்னி என்று அழைக்கப்பட்டுள்ளது என்று அசோகர் கல்வெட்டினை ஆதாராமாகக் கொண்டு கூறுகிறார்.இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறியவர்களால் அதே பெயரில் தாம்ப பன்னி என அழைக்கப்பட்டு தாமிரபரணியாக ஆகியிருக்கிறது என்பது அவருடைய ஆய்வு.
தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான உறவுகள் வரலாற்றின் ஆதிப்பக்கங்களில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.கிரேக்க, அரேபிய,சீனக் குறிப்புகளில் இதற்கு முக்கிய இடமுள்ளது.இவை அனைத்திலும் இலங்கை என்று எதிலும் இல்லை. கி.பி.2 ம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் மெகஸ்தனிஸ் இந்தியா வந்தான்.இங்கிருந்து இலங்கை சென்றான். அவனது குறிப்பிலும் அந்தத் தீவை இலங்கை என குறிக்கவில்லை. தாம்ரபனே என்றே குறிப்பிடுகிறான்.
 Image may contain: outdoor, nature and water

இலங்கை வரலாற்றுக்கு அடிப்படை ஆதாரமாக முன் வைக்கப்படுவது மகாவம்சம். இலங்கை பௌத்த வரலாற்றின் மூலநூல் இது. இந்த நூலும் இலங்கைத்தீவை தாமிரபரணி என்று தான் அழைக்கிறது.
தமிழகத்தின் தாமிரபரணிக்கரையில் திருநெல்வேலி இருப்பது போல, இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி உள்ளது. இப்பொழுது யாழ் பல்கலைக்கழகமும் இங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைய இலங்கையும் தாமிரபரணி என்ற பெயரில் அழைக்கப்பட்டது கி.மு.3 ம் நூற்றாண்டுவரை என்கிறது வரலாற்று ஆய்வுகள்.அப்படியெனில் தாமிரபரணி அங்கும் சென்றதா? அங்கு சென்றிருந்தால் இபபோது ஏன் தீவாக இருக்கிறது. 3 ம் நூற்றாண்டில் என்ன நடந்தது?
தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான உறவுபற்றி ஒரு கதை மூலம் சொல்லப்படுகிறது.
இசையால் அகிலத்தை வெல்ல ஒவ்வொரு நாடாக செல்கிறான் இராவணன். பலரை போட்டியில் வென்று அடிமையாக்குகிறான். பொதிகை அவனை ஈர்க்கிறது. அகத்தியனைக் காண்கிறான்.
போட்டிக்கு தயாரா என ஆணவத்தோடு கேட்கிறான்.
போட்டி துவங்குகிறது.
இராவணன் பாடிய பொழுது பறவைகளும், விலங்குகளும் அசைவற்று நிற்கிறது.வெற்றிக்களிப்புடன் அகத்தியனை
நோக்குகிறான்.அகத்தியன் யாழ் எடுத்து மீட்டத்துவங்கினான்.
தமிழர்களின் இசைக்கருவி யாழ்.யாழின் இசையில் அசையும் பொருள்கள் அசையாமல் நிற்கிறது. பொதிகையில் அனலும்,தொடர்ந்து புகையும் வெளியாகிறது. இராவணன் தோல்வியை ஒத்துக் கொள்கிறான்.
நான் என்ன செய்யவேண்டும் கேள் என்கிறான் இராவணன்.அகத்தியன்
பதில் இதுதான்.பொதிகை போர் அற்ற பூமியாக இருக்கவேண்டும்.
நான் இனி பொதிகையில் போர் தொடுக்கமாட்டேன் என்று போகிறான்
இராவணன்.இந்தக்கதையின் முழுமையை தொல்காப்பியத்தில்
நீங்கள் படிக்கலாம்.
படத்தில் உள்ளது பாணதீர்த்த அருவி.

0 comments:

Post a Comment