Sunday, January 6, 2019

மூங்கில்வனம் 2 - சூர்யா சேவியர்

பிரபஞ்சப் பெருவெடிப்பு என்கிறது விஞ்ஞானம்.இந்தப் பெருவெடிப்பில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கொதிக்கும் பாறைப் பிழம்பாக பிறந்ததே பூமி.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெய்த மழையினால் குளிர்ந்து நீரால் நிரம்பிய நீர் கோளமாக பல காலம் இருந்தது.நீர் ஆவியாகிச் செல்ல நிலப்பரப்பு வெளித் தோன்றி நீரில் மிதந்தது.நீர்ப்பரப்பெங்கும் சிதறிக்கிடந்த நிலச்சிதறல்கள் 2500 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமத்திய ரேகையை ஒட்டி ஒன்று சேர்ந்து ஒரு மாகண்டமாக ( SUPER CONTINENT)
உருவெடுத்தது. இந்த ஒரே கண்டத்திற்கு பாங்கீ கண்டம் என்று பெயர்.

அதன் பின்னர் 1200 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஒரே மிதவைக் கண்டம் உடைந்து பிரிந்தது.இரண்டாகப் பிரிந்த இந்த கண்டங்களுக்கு லாராஷியா,கோண்ட்வானா என்று பெயர்.
இரண்டாக பிரிந்த கண்டம் மேலும் பிரிந்து தற்போது ஏழாக உள்ளது.

ஆரம்பத்தில் ஆப்பிரிக்கா,மடகாஸ்கர், செசல்ஸ் தீவுகளோடு இணைந்த மலைப்பகுதியானது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புவிஇயல் மாற்றத்தால் விலகியது.80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளின் தொகுப்பே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்.




Image may contain: mountain, sky, cloud, outdoor and nature


கண்டங்கள் நகர்ந்து மோதிக் கொண்டு புதிய நிலப்பரப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்த போது மனிதன் தோன்றவில்லை.மனிதன் பூமியில் தோன்றி கொஞ்ச வருடங்கள் தான் ஆகிறது.40 லட்சம் வருடம் தான். அதிலும் நியாண்டர்தால் மனிதன் இன்றைய நவீன மனிதனாக மாறி 40 ஆயிரம் வருடம் தான் ஆகிறது.

கோண்ட்வானா பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் மூத்த மலைகளுள் ஒன்று.வடக்கே குஜராத்தின் தபதி நதிக்கரையில் தொடங்கி தெற்கே குமரிக்கடலில் மூழ்கிக்கிடக்கிறது. தற்போது இருப்பது 1600 கிலோமீட்டர் மட்டுமே.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் 900 மீட்டர்.60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.கேரளாவின் ஆனைமுடி மலை தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான பகுதி.இதன் உயரம் 2695 மீட்டர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் 5000 பூக்கும் தாவர வகைகளும்,139 பாலூட்டிகளும்,508 வகையான பறவைகளும்,176 வகையான இரு வாழ்விகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மலைத்தொடரில் ஏராளமான நதிகள் உருவாகி ஓடினாலும் கோதாவரி,கிருஷ்ணா,காவிரி,தாமிரபரணி ஆகிய நதிகள் முக்கியமானவை. மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி உருவாகினாலும் அதன் தாய்வீடு பொதிகை மலையே.சாதாரண பொதிகை அல்ல.சந்தனப் பொதிகை.

ஆமா
பொதிகை என்றால் என்ன?

0 comments:

Post a Comment