Wednesday, January 16, 2019

மூங்கில்வனம் 3 - சூர்யா சேவியர்

அந்த மலைத்தொடர் மிகவும் உயரமானது.கடல் மட்டத்திலிருந்து 6800 அடிகள்.எப்போது மழை பெய்யும்,எப்போது மழையை நிறுத்திக் கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது.சந்தன மரங்கள் அடர்ந்த பகுதி.இப்போது மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுவிட்டது.
250 சதுர கிலோ மீட்டர் அடர்ந்த காடுகளையும்,படர்ந்த மரங்களையும் கொண்ட பகுதி.மழை பெருக்கெடுக்கும் காலங்களில் இங்கு வெள்ளமும் பெருக்கெடுக்கும்.மற்ற காலங்களில் நீர் ஊற்றாகக் கசிந்து கொண்டிருக்கும்.ஐந்து உயரமான சிகரங்களைக் கொண்ட இடமே சந்தனப் பொதிகை.
பொதிகை என்றால் ரகசியம் என்று பொருள். பொதி என்றால் பிணைப்பு, தொகுதி, முளை, அரும்பு என்ற பொருளும் உண்டு.பூமியில்
அணுக்கள் ஒன்றாக இணைந்து வெப்பம் தனிந்து இறுகிய இடம் எனும்
பொருளில் பொதிகை எனப்படுகிறது. செடி,கொடிகள் அரும்பும் முதல்
இடம் இதுதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதிகையை ஏகபொதிகை,நாக பொதிகை என பிரித்துள்ளார்கள்.ஏக பொதிகையில் இருந்து வலது புறமாக 5 கிலோமீட்டர் தொலைவில் நாகபொதிகை உள்ளது.
புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்திகள் வரை அனைத்தும் பொதிகையில் உண்டு.குலவு,புலவு.சர்க்கரை வேம்பு,பாப்பிக் கொடி,கருநீலி,மயிற்சிறகை,கட்டுக் கொடி,செருப்படை போன்ற மூலிகைகளும்,தாவரங்களும் அடர்ந்து கிடக்கும்.
பளிங்குகாய்,கல் தாமரை,கீரிக்கிழங்கு, பொன்கொரண்டி ஆகிய மருத்துவ மூலிகைகளும் ஆலம்,சாலம்,காந்தம்,கூந்தல் உளளிட்ட 10 வகை பனைகளும் உள்ளன.கல்வாழை, ஞாற வாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் உள்ளன.
உலகின் முதல் மலைகளுள் ஒன்று என்றால்,மொழியும் இங்கிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும்.தமிழ் பிறந்த மலையும் இது.இங்குள்ள பரதேசிபடவு என்ற இடத்தில் தமிழின் வட்டெழுத்துக்கு முந்தைய ஆதி 15 எழுத்துகள் உள்ளன.யாரும் இதுவரை படித்தறிய முடியவில்லை.
எப்போதும் பறவைகள்,விலங்குகளின் சத்தம் கேட்கும் இந்தக் காட்டில் நீர் ஓடி வரும் அழகைக்காண கோடி கண்கள் வேண்டும்.26 சுனைகளில் துளித்துளியாக சேர்ந்த நீர் ஓரிடத்தை அடைகிறது.அந்த இடத்தைச் சுற்றி அழகிய கருடமலர்கள் பூத்துக்குலுங்குகிறது. கருடமலர்கள் பூப்பதை வைத்தே மழை பொழிவதை கணக்கிடுகிறார்கள்.அதிகமாக பூத்தால் அந்தக்காட்டில் அடை மழைதான்.

Image may contain: mountain, sky, outdoor and nature
பூங்குளத்தில் உள்ள கருடமலர்கள் பூப்பதை வைத்து மழை பொழிவதை கணக்கிடுவதாகச் சொன்னார்கள்.யார் அவர்கள்? இயற்கையை உடையாகக் கொண்டு வாழும் ஆதிப்பழங்குடியினர் தான்.காணிகள் என அழைக்கப்படுகிறார்கள்.இவர்களுக்கு இணையான வானிலை ஆய்வாளர்கள் ஒருவரும் இல்லை. இன்றும் அங்கு வாழ்கிறார்கள் நவீனத்தின் வாசலுக்குள் வந்தும் வராமலும். காலத்தை கணித்தவர்கள் என்பதால் கணியர்கள் என்பதே காணி என்றானதாகவும் சொல்லப்படுவதுண்டு.
கருடமலர்கள் சுற்றி நிற்கும் அந்த இடத்திற்குப் பெயர் பூங்குளம்.பூக்கள் சுற்றி நிற்பதால் தான் பூங்குளம்.இங்கிருந்து தான் தாமிரபரணி தன் பயணத்தைத் தொடங்குகிறது.இந்த அடர்ந்த மலைக்குள் ஒரு கட்டை மனிதர் வாழ்ந்தார்.அவரைப்பற்றி அறிய மனம் முற்படுகிறது.வேறு யார் அகத்தியர் தான்.அகத்தியரின் வாழ்க்கையை அறியச் சென்றால் அது புராணக்கதைக்குள் செல்கிறது.
அகத்தியரும் ஒருவரல்ல.பல அகத்தியர்கள் வருகிறார்கள்.தாமிரபரணியில் வாழ்ந்தவர் தமிழ் அகத்தியர்.ரிக் வேத காலத்தில் கங்கை கரையில் வாழ்ந்த அகத்தியன் சமஸ்கிருத அகத்தியன். காவிரியில் ஒரு அகத்தியர் உண்டு.அவர் தமிழ் அகத்தியரைப்போல திருமணமாகாதவர் அல்ல.காவேரி,லோப முத்திரை என இரண்டு பெண்களைத் திருமணம் செய்தவர்.
அகத்தியர் யார் என அறியவேண்டுமானால் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் அகத்தியரின் மாணவரே தொல்காப்பியர். அகத்தியர் சித்தர்களின் தலைவர். சித்தர்கள் ரகசியம் நிறைந்தவர்கள். கடவுளை மறுத்தவர்கள்.அகத்தியர் ரகசியங்களின் ரகசியம்.


0 comments:

Post a Comment