Wednesday, January 16, 2019

மூங்கில்வனம் - 4 - SURYA XAVIER

"திங்கள் முடி சூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்குமுகில் சூழும் மலை
தமிழ் முனிவன் வாழும் மலை
அங்கையற்கண் அம்மை
திருவருள் சுரந்து
பொழிவதெனப் பொங்கருவி
தூங்குமலை பொதிய
மலையென் மலையே" என்று பொதிகையைப் புகழ்ந்து குறத்தி பாடுவதாக குற்றால குறவஞ்சி கூறுகிறது.
பொதிகையின் உயர்ந்த இடத்திற்கு ஏக பொதிகை என்று பெயர்.இங்கு தான் அகத்தியர் வாழ்ந்ததாக வாய் வழக்கு. இந்த இடத்திற்கு அகத்தியர் மொட்டை என்று பெயர்.இங்கிருந்து கீழே பார்த்தால் ஒரு குளம் தெரிகிறது.இதுவே தாமிரபரணி தன் பயணத்தைத் தொடங்கும் பூங்குளம்.(படத்தில் உள்ளதே பூங்குளம்)
பூங்குளத்திற்கு நேரடியாகச் செல்லும் பாதை இல்லை.அகத்தியர் மொட்டையிலிருந்து காணலாம். அங்கிருந்து 2000 அடி பள்ளத்தில் பூங்குளம் தெரிகிறது.ஏக பொதிகைக்கு அருகே நாக பொதிகை உண்டு.கருவுற்ற பெண்ணைப் போல காட்சி தருகிறது. இங்கு இரவில் ஒளிரும் தன்மை கொண்ட மரங்கள் உண்டு.
பூங்குளத்தைத் தாண்டினால் வரும் அடுத்த இடம் இஞ்சிக்குழி. இங்கு காணி பழங்குடி மக்களின் குடியிருப்பு உள்ளது. காலத்தைக் கணிக்கும் கணியர்களே காணிகள்.யார் அவர்கள்? அகத்தியரால் அழைத்துவரப்பட்டதாகக் கூறுகிறார்கள். குறவர்,பளியர் வரிசையில் பழங்குடி மக்கள் என அரசு குறிப்புகளில் உள்ளது. ஆவோலை வேய்ந்த குடிசைகளே இவர்களின் குடியிருப்பு.
இவர்களின் குடிசை பெரும்பாலும் ஆறு கால்கள் (கம்புகள்) கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. கணவன்,மனைவி,குழந்தை ஆகிய மூவருக்கும் ஆறு கால்கள் என்பதே கணக்கு.கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்றது வைதீகம். இவர்கள் தெய்வம் இல்லாத இடத்தில் தான் குடிசைகளை அமைக்கிறார்கள். தெய்வம் இல்லாத இடம் எது என்பதை அறிவது அவர்களின் தலைவர் மூட்டுக்காணியின் பொறுப்பு.தெய்வத்தை மனிதர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதே விளக்கம்.
இவர்களுக்குள் கையில்லம்,மூட்டில்லம் என இரண்டு பிரிவுகள் உண்டு.இல்லம் பார்த்தே இல்லறம் செய்கின்றனர்.இல்லம் மாறி காதலிக்க முடியாது. இரத்த வகை சார்ந்தே இந்தப் பிரிவுகள் உள்ளது.இல்லம் மாறி காதலித்தால் முதுகில் கல் ஏற்றி தண்டனையும் உண்டு. இவர்களின் குல தெய்வம் தம்பிரமுத்தான்.மலையில் கண்ணாடி பாறை அருகே தம்பிரமுத்தான் கோவில் உள்ளது. கொக்கரை எனும் இசைக்கருவி இசைத்து வழிபாடு நடக்கிறது.
இஞ்சிக்குழியைக் கடந்தால் அடுத்து வரும் இடம் துலுக்கர் மொட்டை.துலுக்கர் என்பது இஸ்லாமியர்களை குறிப்பதாக உள்ளது.துலுக்கர் என்பது துருக்கர் என்பதன் மறுவலே.துருக்கியர்கள் இந்தியாவிற்குள் வந்ததன் அடையாளமே.

Image may contain: outdoor and nature
இங்குள்ள துலுக்கர் யார்? சதுரகிரி சித்தர் ராமதேவர் என்பவர் தவம் செய்ததாகவும் அவர் பின்னாளில் யாக்கூப் என்ற பெயரில் இஸ்லாமியராக மதம் மாறியதும் தான் துலுக்கர் மொட்டை என அழைக்கக் காரணம்.
துலுக்கர் மொட்டையை அடுத்து பாண தீர்த்தம்.தமிழகத்தின் ஆதிப் பழங்குடி ஐந்தில் ஒன்றே பாணர்கள். இவர்களால் இது பாண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த பாண தீர்த்த அருவியில் குளிப்பது பேராணந்தம். இந்த மலையில் இருக்கும் மற்றொரு இடம் பாண்டியன் கோட்டை. விக்கிரபாண்டியன் எனும் மன்னனால் கட்டப்பட்ட மூலிகை கோட்டை இது.இப்போது சிதலமடைந்து கிடக்கிறது.சாண்டில்யன் எழுதிய மூங்கில் கோட்டை நாவல் இதைப் பற்றியதே.
இந்தக் கோட்டையிலிருந்து பாபநாசம் வரை 127 முரசு மண்டபங்கள் இருந்ததாக வரலாறு. எதிரிகள் கோட்டைக்குள் வந்துவிடாமல் இருக்க முரசு கொட்டி கோட்டைக்கு தகவல் தெரிவிப்பது. இதன் மையமான இடத்திற்கு கொட்டும் தளம் எனப் பெயர்.மலையில் மின்சாரவாரிய ஊழியர்கள் தற்போது இருக்கும் லோயர் கேம்ப் பகுதியே கொட்டும் தளம்.
தமிழகத்தின் பலருக்குமான 64 குல தெய்வங்கள் ( சாஸ்தாக்கள்) ஒருங்கே அமையப்பட்ட கோவில் இங்கு உண்டு. தாமிரபரணி ஆறு கோடு கிழித்தப் பாறையின் நடுவே உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில். இந்தக் கோவிலின் வரலாறை பிறகு அறியலாம்.இந்தக் கோவில் வரலாறை 2001 ம் ஆண்டு நூலாக எழுதியுள்ளேன்.
தாமிரபரணி பூங்குளத்தில் புறப்படும் முன்பே பேயாறு,சிற்றாறு,உள்ளாறு ஆகிய மூன்று நதிகள் கலந்துவிடும்.காரையாறு,மயிலாறு,பாம்பாறு ஆகிய மூன்றும் பாணதீர்த்தத்திற்கு முன்பு தாமிரபரணியில் கலந்துவிடுகிறது. இந்த ஆறு ஆறுகளை இணைத்துக் கொண்டு காரையாறு அணையை அடைகிறது. அந்த அணை கட்டிய வரலாறு துயரமும் மகிழ்ச்சியும் கலந்தது.
தாமிரபரணி மூங்கில் வனத்துக்குள் பாய்ந்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணியை நாளை அறியலாம்.தாமிரபரணியின் துணை ஆறுகள் 137. இத்தனை குழந்தைகளையும் அணைத்துக் கொண்டே தாமிரபரணித்தாய் செல்கிறாள்

0 comments:

Post a Comment