Sunday, January 6, 2019

கண்டதை படித்துக் கொண்டிருங்கள் - Vijay Bhaskarvijay

நிறைய சிறுகதைகள்
நிறைய நாவல்கள்
நிறைய ஜனரஞ்சக இலக்கியங்கள்
நிறைய கட்டுரைகள்
நிறைய சமூக நீதி புத்தகங்கள்
குட்டி குட்டி குழந்தைகள் கதைகள்
நிறைய அறிவியல் கணிதம்

என்று தொடர்ச்சியாக படிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தால்...
படித்ததை எல்லாம் உலகில் காண ஆரம்பித்தால்
தேட ஆரம்பித்தால்
நிறைய மனிதர்களிடம் பழகிப் பார்த்தால்
அவர்கள் கதைகளை கேட்டால்
குறிப்பிட்ட காலத்தில் தினசரியை எடுத்து விரித்தால் எல்லா செய்திகளிலும் ஒரு இலக்கிய உணர்வு கிடைக்கும்...
ஒரு மாதிரி புல்லரிக்கும்.
அந்த நிலை இலக்கியமாதலில் முக்கிய கட்டமாகும்.
அன்றிலிருந்து அவனுக்கு சம்பவமே இலக்கியமாகிப் போகும்.
ஒரே ஒரு வாக்கியம் கூட இலக்கியமாகத்தான் தெரியும்.
அந்த செய்தியில் எதை நம் மனம் எடுத்துக் கொள்கிறது என்பதையும் நம் மனமே விமர்சனம் செய்யும் போது வித்தியாசமான மோன நிலைக்கு செல்வோம்.

Image result for tamil books
சமீபத்தில் பேப்பரில் ஒரு செய்தி படித்தேன்.
ஒரு மாடு பனம்பழம் ஒன்றை கடித்திருக்கிறது. அந்த பனம்பழத்தின் உள்ளே வெடிகுண்டை யாரோ வைத்திருக்கிறார்கள். அது வெடித்து மாட்டின் வாய் கிழிந்து விட்டது என்று படித்தேன்.
அதைப் படித்ததும் கலவையாக பல உணர்வுகள் ஒரே சமயத்தில் வந்தது.
ஐந்து பத்து நிமிடம் எதுவும் செய்யமுடியவில்லை.
சோபாவில் இருந்து வேகமாக எழுந்தேன். தரையில் அப்படியே மல்லாக்க படுத்து விட்டேன். உடனே அப்படியே மாட்டின் மேல் பரிதாபப்பட்டு அப்படி செய்தேன் என்று நினைக்க வேண்டாம்.
பரிதாபம் அதில் ஒரு உணர்வு.
அதைத்தவிரவும் பல பல உணர்வும் அறிவுக் கேள்விகளும் என்னை தாக்கியது.
அது எனக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.
இந்த செய்தி உன்னை பரவசமா அடைய வைக்கிறது என்று இன்னொரு பக்கம் குற்ற உணர்வும் வந்தது.
இல்லை இல்லை மாட்டின் மேல் எனக்கு அதிக இரக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த பரவசம் வேறு பரவசம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
இவையெல்லாம் ஒரு விநாடியில் மூளைக்குள் நிகழும் போது எல்லாவற்றையும் போட்டு விட்டு அப்படியே வெறுந்தரையில் படுத்து விட வேண்டும் என்றுதான் தோன்றும்.
ஒரு நல்லநாவலோ, சிறுகதையோ படித்தாலும் இப்படித்தான் ஐந்து பத்து நிமிடம் இயக்கமற்று கிடப்போம் இல்லையா?
அதே உணர்வை ஒரு வரி செய்தி கொடுக்கும் போது அது இலக்கியம்தானே..
இதைத்தான் சொல்கிறேன்...
படித்துக் கொண்டே இருந்தால் குறிப்பிட்ட சமயத்தில் செய்திக் குறிப்புகளே இலக்கியமாக தோன்றும் என்று.
ஒரு தோராயமான விதியாக குறைந்தது 35 வயதுக்கு பிறகுதான் இந்த நிலை கிட்டும் என்பது என் யூகம்.
ஸோ ஒரு வயது வரை கண்டதையும் படியுங்கள்.
சம்பவங்களே இலக்கியமாக தோன்றும் வரையாவது கண்டதை படித்துக் கொண்டிருங்கள்.

0 comments:

Post a Comment