Sunday, December 30, 2018

வயல்காட்டு இசக்கி - விஜய் பாஸ்கர்விஜய்

Pioneer என்றால் முதலில் கண்டுபிடித்தது, முதலில் செய்தது... இப்படி முதலில் யார் தொடங்கியது என்ற அர்த்தமாகும்...
வயல்நிலப் பிரச்சனை ஒன்றை நண்பர் விளக்கிக் கொண்டிருந்தார்.
”நீங்கள் நகரத்தில் இருக்கிறீர்கள். ஊரில் உங்கள் நிலத்தில் பிரச்சனை செய்வதே உங்கள் சொந்தங்கள் என்கிறீர்கள். யார் உங்களுக்கு ஊர் தகவலை இவ்வளவு அக்கறையாக சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.
“காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக எங்கள் வயலை கவனித்துக் கொள்பவர் அதை சொல்லுவார். அவருக்கு வயல் மேல் அதிக ஆர்வம். அதுதான் அவர் உலகம்” என்றார்.
பரம்பரை பரம்பரையாக தனக்கென்று சொந்த வயலே இல்லாமல் உழைப்பை எல்லாம் கூலிக்கு கொட்டி வேலை செய்து வந்தாலும்,
வயல் நிலத்தை சொந்தம் கொண்டாடுபவர்களால் சுரண்டுப்பட்டாலும் அந்த உழவுத்தொழில் மேல் இருக்கும் ஆர்வமும் நிலத்தை முதலாளிக்காக காக்க வேண்டும் என்ற ஆர்வமும் மிகுதியானது.
அது ஒரு குணமாக பரம்பரை பரம்பரையாக வளர்த்து எடுத்துக்கப்பட்டிருக்கிறது...
அ.கா பெருமாள் எழுதிய ”வயல்காட்டு இசக்கி” என்ற கட்டுரையில் ஒரு சம்பவத்தை சொல்கிறார்.
வயல்காட்டில் இருக்கும் இசக்கி பற்றிய கதை.
கூலி வேலை செய்யும் பெண் தன் குடிசை வெளியே வயலைப் பார்க்கிறார்.
மழை பெய்து கொண்டிருக்கிறது. வயலுக்கு தெற்கே உள்ள குளம் ஒன்று நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கிறது.
குளம் உடைந்தால் குடிசைக்கு ஒன்றுமில்லை. அது மேட்டில் இருக்கிறது. ஆனால் வயலுக்கு பிரச்சனை.
விளைந்தது எல்லாம் மூழ்கிவிடும். எப்படியாவது வயல் தானியத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த அப்பெண் தன் சிறு மகனை குடிசையில் வைத்து விட்டு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு குளத்தின் அந்த பக்கம் உடைத்து விடப் போனாராம்.
அப்பக்கம் உடைத்தால் நீர் ஆற்றில்தான் போய் கலக்கும். வெள்ளம் வராது.
அப்படி கொத்தி குளக்கரையை உடைக்கும் போது வெள்ளம் பெருக்கெடுத்து அப்பெண்ணையும் அடித்துச் சென்றது.
மறுநாள் காலை கணவன் வந்து மனைவியைப் பார்த்தால் வெள்ளத்தால் அடிபட்டு இறந்து கிடக்கிறார் மனைவி.
மனைவியை கட்டிக்கொண்டு அழும் போது அவர் மேடான வயிற்றை தடவி தடவி அழுதாராம் கணவன்.
அப்போது வயிற்றில் குழந்தை இருந்தது அதன் பிறகுதான் ஊருக்கு தெரிந்திருக்கிறது.
வயிற்றுப்பிள்ளையோடு இறந்தப் பெண்ணை ஆற்றுப்படுத்த அவரை அம்மனாக்கி பூஜை செய்து வருகிறார்களாம்.
அதுதான் வயல்காட்டு இசக்கியின் கதை.
- முதலாளிகளுக்கு விசுவாசமாக வேலை செய்ய வேண்டும்.
- ஏன் எதற்கு என்று கேட்காமல் கூலி எதிர்பாராமல் வேலை செய்ய வேண்டும்.
- பரம்பரை பரம்பரையாக வேலை செய்ய வேண்டும்.
- உயிரைக் கொடுத்தாவது, வயிற்றில் குழந்தை இருந்தால் கூட உயிரைக் கொடுத்து வேலை செய்ய வேண்டும்.
இதெல்லாம் அக்காலத்தில் வயலில் கூலி வேலை செய்யும் மக்களின் உணர்வில் ஊறி இருந்தது.
கூலி வேலை செய்பவராக பிறந்தாலே இதையெல்லாம் செய்துதான் ஆகவேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்.
இப்படி பரம்பரை பரம்பரையாக வயலை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பரம்பரை பரம்பரையாக வேலை செய்து கொடுக்க வேண்டும் என்ற அழுத்தமான எண்ணம்.

Related image
இப்படி எத்தனை லட்ச மக்கள் இருந்திருப்பார்கள்.
அவர்களிடம் எல்லாம் சென்று
“இல்லை நீங்கள் தொழிலாளி அவர் முதலாளி அதுதான் உங்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு. நீங்கள் அடிமை இல்லை. தொழிலாளர்களுக்குள்ள உரிமை அனைத்தும் உங்களுக்கு உண்டு என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து பேசி பேசி, புரிய வைத்து அவர்களை பெருந்திரளான போராட்ட சக்தியாக மாற்றுவது எவ்வளவு கடினமான வேலை.
அப்படி பெருந்திரளாக்க எத்தனை பேர் கஷ்டப்பட்டிருப்பார்கள்.
எவ்வளவு தியாகம் செய்திருப்பார்கள்.
அடித்தட்டு மக்களை அறிவான அறிவாக விழிப்படைய வைக்கும் கலையை முதலில் தொடங்கி வைத்தது அவர்கள்தாம் என்று நம்புகிறேன்.
கொஞ்சம் தகவலை தெரிந்து கொண்டு உலகைப் பார்க்கும் எளிய அறிவுடையவனாக
இதைத்தான் கம்யூனிஸ்டுகளின் முக்கியமான
சிறப்பான பங்களிப்பாக பார்க்கிறேன்.

0 comments:

Post a Comment