Saturday, December 8, 2018

ஜோதிராவ் புலே

காந்தியை ரயிலில் இருந்து வெள்ளையர்கள் தூர எறிந்தார்கள் என்ற கதையை சிறு வயதில் இருந்தே நிறைய படித்திருப்போம் பார்த்திருப்போம்.
ஆனால் ஜோதிராவ் புலே தன் நண்பரின் திருமண வீட்டில் ஆடிப்பாடும் போது அவரை உயர்சாதிக்காரர்கள் “ கீழ்சாதிக்காரர்கள் இங்கே ஆடக் கூடாது” என்று துரத்தி தள்ளிய கதையை சிறுவயதில் எங்கும் படித்திருக்க மாட்டோம், பார்த்திருக்க மாட்டோம்.

காந்தியை தூக்கி வெளியே எரிந்தது நிறவெறி.அதைச் செய்தது வெள்ளையர்.
வெளியே உள்ளவர்கள். நம் சமூகத்தோடு கலக்காதவர்.அதனால் அதை ஒரு சுவையாக கொதிப்பாக பல்வேறு வடிவங்களில் படைத்து சமூகத்துக்கு சொல்ல முடிகிறது. அதே சமயம் ஜோதிராவ் புலேவை வெளியே எரிந்தது பார்ப்பனியம். அதைச் செய்தது உயர்த்தப்பட்ட சாதிக்காரர்கள். உள்ளே உள்ளவர்கள். நம் சமூகத்தோடு கலந்தவர்கள்.
அதனால் இதைச் சொன்னால் அவர்கள் மனம் நோகுமோ, ஏன் இதையெல்லாம் சொல்ல வேண்டும், இக்கதைகளைக் கேட்டு தாழ்த்தபட்டவர்கள் தங்கள் உண்மையைத் தெரிந்து கொண்டு,
உரிமையை கேட்டு விடுவார்களோ என்ற எண்ணத்தால்
அதை ஒரு சுவையாக கொதிப்பாக பல்வேறு வடிவங்களில் சமூகத்துக்கு சொல்ல முடியாமல் போகிறது. இதுதான் இங்கே சமூகநீதியை பாப்புலர் கலாச்சாரத்தில் பேச மிகப்பெரிய தடையாக இருக்கிறது.
விகடனிலோ, குமுதத்திலோ, குங்குமத்திலோ பார்ப்பனியம் என்ற வார்த்தையைக் கூட எழுத அவர்கள் தயங்குவது இதனால்தான்.
எல்லா வகையில் பார்த்தாலும் பார்ப்பனியம் நிறவெறியை விட கொடூரமானது. அது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம், இந்திய குடிமகன்கள் தலை நரம்பெல்லாம் பரவி இருக்கிறது.
அனாலும் அதைப் பேச முடியவில்லை. காரணம் எங்கே பேசினால் மக்கள் மனதை புண்படுத்துவோமோ என்பதாம்.

Image result for jyotirao phule and gandhi

ஹிட்லர் யூதர்களை கொத்து கொத்தாக கொன்றார். ஹிட்லரின் பேரன் அதை அநியாயம் என்று பொதுவில் பேசுவானா அல்லது அநியாயம் இல்லை என்று பொதுவில் பேசுவானா அல்லது எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பானா.
அல்லது ஹிட்லர் பேரன் சபையில் இருக்கிறான் அதனால் நாம் ஹிட்லரை குறை சொன்னால் அவன் மனம் புண்பட்டு விடும் என்று நாம் அமைதியாக இருப்போமோ? மாட்டோம். ஏனென்றால் ஹிட்லர் சும்மா ஒரு கோபம் கொண்டு எல்லாரையும் கொல்லவில்லை. ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி அதை நம்பி அதைப் மக்களிடையே பரப்பி மக்கள் ஆதரவைப் பெற்று யூதர்களை கொன்று குவித்தான்.
ஹிட்லர் இறந்த பிறகும் அவரை விமர்சனம் செய்வது என்பது அவர் சித்தாந்தத்தையும் விமர்சனம் செய்வதாகும். இன்றும் அந்த சித்தாந்தம் பலரைக் கொல்லக் கூடும். அது வரவே கூடாது என்ற கவனத்தில் சொல்வதாகும்.
ஹிடலர் பேரன் மனம் புண்படும் என்று விமர்சனம் செய்யாமல் இருந்தால் அது தீய சித்தாந்ததின் வளர்ச்சிக்கே வழிவகுக்கும்.
பார்ப்பனியமும் அதுதான்.
அலுவலகத்திலோ, பக்கத்து வீட்டிலோ, முகநூலிலோ
நமக்கு பல பிராமின் முதலியார் செட்டியார் கவுண்டர் போன்ற ஜாதி எண்ணம் உடைய நண்பர்கள் நடைமுறை வாழ்க்கையில் இருக்கலாம்.
அவர்கள் சாதி எண்ணத்துக்காக எக்காலமும் வெறுக்க வேண்டியதில்லை. தனிமனித வெறுப்பு அங்கே தேவையில்லை. அவர்களோடு உணவருந்தாலாம். சினிமாவுக்கு போகலாம் நட்பு பாராட்டலாம்.
ஆனால் சமூக நீதி கருத்து என்று வரும் போது நம் கருத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஐயோ இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வை பற்றி சொன்னால் இவர் நம்மை பிரிந்து விடுவாரோ,
கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் சாதிப் பிரிவினை சொன்னால் இவர் மனசு கஷ்டப்படுவாரோ,
தலித்தியம் பேசினால் நண்பர் தப்பாக எடுத்துக் கொள்வாரோ என்றெல்லாம் நினைக்கவே கூடாது.
இந்த தேவையில்லாத கண்ணியம், டீசன்சி சமூக நலனுக்கு எதிரானது.
நாட்டில் 90 % சாதியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதன் ஆணி வேரான பார்ப்பனியத்தை ’நம் நண்பர்கள் மனம் கோணக்கூடாது’ என்று விமர்சிக்காமல் இருப்பது அந்த 90 % மக்களுக்கு செய்யும் துரோகமாகும். பேராசிரியர் சத்யபால் அன்றைய உரையில்
“70 ஆண்டுகளாக பலர் உயிரைக் கொடுத்து தியாகம் செய்து வாங்கிக் கொடுத்த சமூகநீதி அடிப்படையிலான உரிமைகளைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறோம். நாம் தெருவில் நடப்பது அவர்கள் தியாகத்தால், நாம் மேலே சட்டை போட்டுக் கொண்டிருப்பது அவர்கள் செய்த தியாகத்தால். நாம் உரிமை கொண்டிருப்பது அவர்கள் செய்த தியாகத்தால். ஆனால் நாமோ கொஞ்சம் கல்வி கற்று வளர்ந்து வசதி ஆகிவிட்டால் சமூகநீதி பேசுவதை விட்டு விடுகிறோம். இந்த வளர்ச்சியும் உரிமையும் தானாகவே வந்ததாக நம்புகிறோம். இன்னும் சிலர் சாதி எல்லாம் இப்ப எங்க இருக்கு என்று உயர்சாதிக்காரர்களை குளிர்விக்குமாறு சமூகநீதிக்கு எதிராகவே பேசுகிறார்கள். இது ஆபத்தான நிலைக்கு நம்ம இட்டைச் சென்று மறுபடி பார்ப்பனியத்துக்கு கீழ் நம்மை அடிமையாக்கும்” என்றார்.
ஆகையால் தேவையற்ற கண்ணியத்தை தவிர்ப்போம். சமூக நீதியை தொடர்ந்து பேசுவோம். பிறர் மனம் புண்பட்டு விடும் என்ற தயக்கத்தை விடுவோம்.
தனி மனிதர்களை அளவு கடந்து நேசிப்போம்.
ஆனால் சமூகநீதி உணர்வில் சமரசம் செய்யாமல் தயங்காமல் இருப்போம். அதை பேசிக் கொண்டே இருப்போம்.
தங்குவோர் தங்கட்டும்.  நட்பில் மங்குவோர் மங்கட்டும்.

0 comments:

Post a Comment