Monday, December 10, 2018

இந்து என்பது மதமல்ல

இந்து என்பது மதமல்ல.சட்டங்களின் தொகுப்பே.
மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் கூறினேன். நான் இப்படிக் கூறுவதன் பொருள் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு கலகம் விளைவிப்பதாகத் தோன்றலாம். சிலருக்குப் புரட்சியாகத் தோன்றலாம். எனவே என் நிலைபாடு என்ன என்பதை விளக்குகிறேன்.
இந்துக்கள் மதம் என்று அழைப்பது உண்மையில் சட்டங்களையும் அல்லது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதிநெறிகளைத்தான். இந்த சட்டங்களின் தொகுப்பை, மதமென்று கூறுவதை நான் மறுக்கிறேன். மதம் என்று பெயரிட்டு மக்கள் முன்பு நிறுத்தப்படுகின்ற இது போன்ற சட்டத் தொகுப்பால் விளைகின்ற கேடுகள் பல.

முதல் கேடு:ஒழுக்கத்துடன், சுதந்திரமான, தன்னிச்சையான வாழ்க்கையை இது மறுக்கிறது. மாறாக அது வெளியில் இருந்து திணிக்கப்படும் விதிகளை அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டு நடக்கிற இழிநிலைக்கு வாழ்க்கையைத் தள்ளிவிடுகிறது. கொள்கை எண்ணத்திற்கு இந்து மதம் எனப்படுவதில் இடமில்லை.
கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் நிலைதான் இருக்கிறது. ஆனால், இந்தச் சட்டத் தொகுப்பால் விளைகின்ற பெருங்கேடு என்னவெனில், இச்சட்டங்களே முக்காலத்திற்கும் பொருந்துபவை என்று இருப்பது தான். அனைத்து வகுப்புக்கும் பொதுவான ஒரே சட்டம் இல்லை என்ற வகையில் அது மோசமானது.ஆனால், எத்தனை தலைமுறையானாலும் சரி, இந்த அநியாயம்-அநீதி என்பது நிரந்தரமாக நீட்டிக்கப்பட வேண்டிய ஒன்று என ஆக்கி வைக்கப்பட்டுள்ளதே!

Image may contain: 1 person, glasses and close-up

சட்ட வல்லுநர்கள் அல்லது மகான்கள் என்று அழைக்கப்படுகிற சில மனிதர்களால் இவை ஏற்படுத்தப்பட்டது என்பதால் நான் இதை மறுக்கவில்லை. இதன் இறுக்கமும், மாறாத்தன்மையுடைய குணங்கள் இருப்பதாலேயே, நான் இதை மறுக்கிறேன்.
ஒரு மனிதனின் வாழ்நிலையும், சூழ்நிலையும் மாறும் போது-அந்த மனிதனின் மனநிலை மாறும். அப்படி இருக்கையில், நிரந்தரமான இந்தச் சட்டத் தொகுப்பை எவ்வித மாற்றமுமின்றி, மனித இனம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? எனவே, இது போன்ற ஒரு மதத்தை அழித்தாக வேண்டும் என்று கூறுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை.
இது போன்ற ஒரு மதத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், மதத்திற்கு எதிரானவை அல்ல. சட்டத்திற்கு மதம் என்று தவறாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையைக் கிழித்தெறியுங்கள். இதுவே உங்கள் தலையாய கடமை.
மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த 'மதம்' என்ற தவறான கருத்தை நீக்குங்கள். மதம் என்று தங்களுக்கு கூறப்பட்டது மதமே அல்ல:சட்ட விதிகளே என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
இந்தப் பணியைச் செய்து முடித்ததுமே, மதம் எனக் கூறப்படும் இச்சட்ட விதிகளை சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு அழித்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான தார்மீக பலம் உங்களுக்குத் தானாகவே எழும்.
(பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு:-1, பக்கம்:66)

0 comments:

Post a Comment