Tuesday, December 18, 2018

The Little Match-Seller - விஜயபாஸ்கர் விஜய்

புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன்...
ஒரு புத்தகத்தை எடுத்து இக்கதையை படித்தேன்.
படித்த முடித்த உடன் நிலைகுலைந்தேன்.
வீட்டுக்கு வந்த உடன் அதை எழுத வேண்டும் போல ஒரு தவிப்பு.
இக்கதையில் வரும் சிறுமி எப்படி இருப்பாள். எந்த கோணத்தில் எந்த இடத்தில் நின்றிருப்பாள். அவளைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தையும் என்னால் உணர முடிந்தது.
உடனே எழுதினேன். எழுதும் போது கலக்கமாக உணர்ந்தேன்.
வருடத்தின் கடைசிநாள் அது.
பனிபொழியும் குளிரில் அச்சிறுமி நடுங்கிக் கொண்டிருந்தாள்.
மெலிந்த உடலையும், திராணியில்லாத குரலையும், வயிற்றைச் சுருட்டும் பசியையும் கொண்டிருந்தாள்.
அலைந்து திரியும் கால்களில் அவள் அம்மாவின் பழைய ஷூக்களை அணிந்திருந்தாள்.அது அவளுக்கு பொருந்தவில்லை.
பாதங்களை மட்டுவாவது பனியிலிருந்து காக்கும் அளவில் அது அவளுக்கு உதவியது எனலாம்.
கையில் ஒரு பை.
அந்த பழைய பையில் தீப்பட்டிகள். தீப்பட்டி ஒன்று கூட விற்கவில்லை. யாரும் வாங்கவில்லை.
தீப்பட்டிகளை விற்காமல் வீட்டுக்கு போக முடியாது. அப்பா கொடுமையாக அடித்து வைப்பார். சில நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி உதைப்பார்.
அப்படியெல்லாம் செய்தால் அது வேதனையை கொடுக்கும் என்று அவருக்கு தெரிவதில்லை.
ஏழ்மை கொடுக்கும் வேத்னையை தாங்க விருப்பமில்லாமல், அப்படியே அவளிடம் திருப்பிவிடும் அப்பாவின் மனதை, அன்பு ஒருமுறை கூட வருடாதது பற்றி யோசிக்கும் அறிவை பெற்றிராத அப்பாவி சிறுமி அவள்.
அப்பாவின் அடி பற்றி யோசித்து ஒரு சரிவான தெருவில் இறங்கி நடக்கும் போது பனியால் வழுக்கினாள்.
உருண்டு விழும் போது காலுக்கு பொருந்தாத அவளது ஷூக்கள் பிரிந்து விழுந்தன.
ஒரு ஷூவை தட்டுத் தடுமாறி எடுத்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு ஷீவை அவ்வழி வந்த சிறுவன் ஒருவன் திருடிக்கொண்டு ஒடிவிட்டான்.
முப்பது விநாடிகளில் ஒற்றை ஷுவுடன் அவள் தனித்து விடப்பட்டாள்.
அடுத்த முப்பது விநாடிகளில் வெறுங்காலில் பனிக்குளிர் ஏற ஆரம்பித்தது.
”ஆஹ் குளிருது” என்று ஒரு காலை இன்னொரு கால் மீது வைத்துக் கொண்டாள்.
ஒற்றைக் காலால் அதிக நேரம் நிற்கமுடியவில்லை.
தடுமாறி கிழே விழுந்தாள்.விரல் இடுக்குகளில் பனி ஈவுஇரக்கமே இல்லாமல் குளிரை பாய்ச்சிக் கொண்டிருந்தது.
ஷூ இல்லாத கால் வெளுக்க ஆரம்பித்தது.
ரத்தம் குறைய ஆரம்பித்தது. ஒரு தீப்பட்டி கூட விற்கவில்லை.
ஒரு வீட்டின் சுவர் அருகே அமர்ந்து கொண்டாள். இங்கே அடிக்கும் குளிருக்கும் அவள் வீட்டின் குளிருக்கும் வித்தியாசமில்லை.
பிய்ந்து போன கூரையை உடைய பனிக்கதிர்கள் நுழையும் வீடும் இந்த தெருவும் ஒன்றுதான் அவளுக்கு. வீட்டில் அடிகிடைக்கும்.. இது தெருவில் அப்பாவின் அடிகிடைக்காது.
அதனாலேயே தெருவில் அமர்ந்திருந்தாள். கால் மரத்துப் போனது. இருட்ட ஆரம்பித்தது. பல வீடுகளில் இருந்து வெண்ணெய் உருகும் உணவின் வாசம் அடித்தது. சூடாக உண்ட பிறகு, வைனை ஊற்றி வீட்டுக்குள் சுகமாக குடித்துக் கொண்டிருப்பார்கள்.
சிறுமிக்கு கண் இருட்டிக்கொண்டுவந்தது. இந்த பையில் இருக்கும் தீப்பெட்டிகளில் ஒரு பெட்டியை எடுத்து தீப் பற்ற வைத்தால் என்ன?
அது குளிருக்கு இதமாய் இருக்குமே என்று தோன்றியது.
தயக்கமாக ஒரு தீகுச்சியை எடுத்து கிழித்தாள்.
தீக்குச்சி தீயாகி ஜொலிக்கும் போது அந்த சாப்பாட்டு மேஜை தெரிந்தது.
அதில் பொரித்த கோழி இறைச்சியும், சுவையான கேக்கும், பழரசமும் இருந்தன. குளிரைப் போக்க அடுப்பொன்றும் மேஜை அருகே இருந்தது. தீக்குச்சி வெளிச்சம் குறையும் போது ஒவ்வொன்றாய் மங்கியது.
அணையும் போது முற்றாக கோழி இறைச்சியும், கேக்கும், பழரசமும் காணாமல் போயின.
சிறுமி யோசித்தாள்.
அடுத்த குச்சியை உரசினாள்.
தீக்குச்சியின் ஒளியில் ஒரு கிறிஸ்துமஸ் மரம் தெரிந்தது. அதன் கரும்பச்சை இலைகள். கரும்பச்சை இலைகளைத் தொடர்ந்த இளம்பச்சை இலைகள்.
அதை அலங்காரப்படுத்தும் மணிகள். தீக்குச்சி அணையும் போது கிறிஸ்துமஸ் மரம் காணாமல் போனது.
அடுத்த குச்சியை எரிக்கும் போது அழகான நட்சத்திரம் மின்னியது. மின்னிய நட்சத்திரம் குச்சி அணையும் போது தரையில் விழுந்து அணைந்தது.
சிறுமிக்கு பாட்டி நினைவு வந்தது.
எவ்வளவு அன்பாயிருப்பாள் பாட்டி. இன்னொரு குச்சியைப் பொருத்தினாள். அங்கே அவள்பாட்டி சிரித்தபடியே தோன்றினாள்.
“பாட்டி என்ன இங்க வந்திருக்கீங்க”
பாட்டி சிறுமியை நோக்கி அன்பாக கையை நீட்டினாள்.
“பாட்டி தீ எரியுறது நின்னாச்சுன்னா நிங்க போயிருவீங்க பாட்டி. அதுக்கு முன்னாடி என்ன கூட்டிட்டு போயிருங்க பாட்டி”
ஒரு குச்சி அணைமுன்னே இன்னொரு குச்சியை ஏற்றினாள்.
பாட்டி போகாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
“பாட்டி நீ நிச்சயமா போகாத பாட்டி அப்பா என்ன ரொம்ப அடிக்கிறார். இதோ குளிர்ல நிக்குறேன். என்கிட்ட போட்டுகிறது ஷு கூட இல்ல. என் காலெல்லாம் மரத்து போச்சு போட்டி. ஐயோ தீக்குச்சி தீரப்போகுதே. தயவுசெய்து என்னவிட்டு போயிராத பாட்டி பயமா இருக்கு எனக்கு”
இன்னும் ஒரு குச்சியை பொருத்தினாள். பாட்டி சிரித்துக் கொண்டே நின்றாள்.
“ஒரு தீப்பெட்டி கூட விக்கல பாட்டி. வீட்டுக்குப் போனா அப்பா அடிப்பார். பயமா இருக்கு. என்னையும் உன்னோட கூட்டிட்டுப் போயிரேன். நா உன் கூடவே வந்த்ர்றேன் பாட்டி.போயிராதீங்க இன்னொரு குச்சியை பொருத்திக்கிறேன்”
தீக்குச்சியை பொருத்திவிட்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டே இருந்தாள் அச்சிறுமி.
பாட்டி, பாசத்தோடு கையை நீட்டி வருமாறு அழைத்தாள்.
சிறுமி மகிச்சியோடு பாட்டியின் கைகளைப் பிடித்துப் போகும் போது குச்சி அணைந்தது.
எங்கும் இருட்டு.
கொடுமையான இருட்டு. பனியோடு கலந்த கொடுமையாக இருள்.
காலை விடிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில்; திளைத்த மக்களுக்கு அந்தக்காட்சி வித்தியாசமானதாகப் பட்டது.
ஒரு சிறுமி கிழித்த தீக்குச்சிகளின் நடுவே குளிரில் நடுங்கி செத்துக் கிடக்கிறாள்.
முகம் வெளிறி பனிசரல்களுக்குள்.
ஒரு பெண்
“பாவம் ராத்திரியெல்லாம் குளிர்ல கிடந்து விரைச்சிட்டா ” என்று மற்றவர்கள் சொல்லும் போது குளிர் அடித்துக் கொண்டிருந்தது.
The Little Match-Seller என்றொரு Hans Christian Andersen FairyTales யில் இருந்து ....

Image may contain: outdoor

0 comments:

Post a Comment