Thursday, December 13, 2018

Alex Faickney Osborn Brainstorm by Vijay BhaskarVijay

நியூயார்க் நகரில் பிறந்து
1941 ஆண்டு விளம்பர கம்பனியின் நிர்வாகியாய் வேலை பார்த்த Alex Faickney Osborn என்பவருக்கு ஒரு பிரச்சனை வந்தது.
தன் கம்பனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்கிறார்களே தவிர புதிதாய் தொழிலுக்கு எந்த விதமான யோசனையும் சொல்வதில்லை.
ஏன் இவர்கள் இப்படி ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள் என்று Osborn ஆராய்ச்சி செய்கிறார்.
செய்து அவர் கண்டுபிடித்ததுதான் Brainstorming யுத்தி.
Storm என்றால் புயல்...
Brain என்றால் மூளை, அறிவு, யுத்தி, யோசனை.
Osborn அந்த இந்த Brain ஐ Storm ஆக ஊழியர்கள் கொட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்தார்.
ஊழியர்களை இப்படி யோசனை சொல்வதை தடுப்பது அவர்கள் ஆர்வமின்மை என்பதை விட உயர் அதிகாரிகளின் அதிகாரம் மற்றும் உயர்வு மனப்பான்மைதான் என்பதையும் கண்டுகொள்கிறார்.
அவர் Brainstorming க்கு நான்கு வழிகள் சொல்கிறார்.
1.Go for quantity : நிறைய யோசனைகள் வரட்டும்.
ஒரு Brainstorm குழுவை அமைத்துக் கொள்ளுங்கள். அப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உயர்வு தாழ்வில்லாமல் அதில் அழைக்கலாம். அவர்களுக்கு பிரச்சனையை புரிய வையுங்கள். குறிப்பிட்ட பொருளை மட்டும் சரியான நேரத்தில் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதற்காக ஒரு Brainstorm நடத்துகிறீர்கள்.
முதலில் அது எப்படி உற்பத்தி ஆகிறது. அதன் கச்சா பொருள் எங்கிருந்து வருகிறது. அது என்ன முறையில் உற்பத்தி ஆகிறது. அதன் டிசைன் போடுவது யார். அதை யார் Pack செய்கிறார்கள். அது எப்படி லாரியில் போட்டு வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது என்று அனைத்தையும் விளக்க வேண்டும். விளக்கிவிட்டு அங்கிருக்கும் அனைவரையும் அவர்களுக்கு தோன்றும் யோசனையை சொல்ல ஊக்கப்படுத்த வேண்டும்.
“சார் டிசைன்ல ஒரு பூ படம் அழகுக்காக போட்டிருக்காங்க. புரொடக்சன்ல அத கொண்டு வர்றது கஷ்டமா இருக்கு”
“ இந்த பொருள் உற்பத்தினாலேயே தொழிலாளர்கள் சோர்ந்து போயிர்றாங்க. ஏன்னே தெரியல. சும்மானாலும் இது கஷ்டம் கஷ்டம்னு ஒரு வதந்தி மாதிரி பரவி அந்த நம்ப ஆரம்பிச்சிட்டாங்க”
இப்படி பலரும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள். அதை பதிவு செய்து கொண்டே வர வேண்டும். அங்கே தரமான ஐடியாக்களை விட அதிமான ஐடியாக்களே தேவை. Quality முக்கியமில்லை. Quantity யே முக்கியம். நிறைய வரட்டும். வருவதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்.
2. Withhold criticism: சும்மா யோசனைகளை விமர்சனம் பண்ணாதீங்க.
நிறைய யோசனைகள் வரும் போது அதைப் பார்த்து நக்கல் பண்ணக்கூடாது. சிரிக்க கூடாது. இதெல்லாம் சாத்தியமான்னு சொல்லக் கூடாது. முட்டாள்தனமா பேசாதீங்கன்னு சொல்லக் கூடாது. யதார்த்தம் புரியாம பேசாதீங்கன்னு சொல்லக் கூடாது.எந்த ஐடியாக்களையும் விமர்சனமே செய்யக் கூடாது. அப்போதுதான் Quantity அதிகம் வரும்.
3.Welcome wild ideas : தைரியமான யோசனைகளை வரவேற்க வேண்டும்.
“ஏன் சார் இந்த பொருள உற்பத்தி பண்ண இவ்ளோ டென்சன். இதுல பெரிய லாபம் வரலன்னா இந்த உற்பத்தியையே நிறுத்திருங்க சார். இந்த ஒரு பொருளால கம்பெனி மொத்தமும் பதற்றமாவே இருக்கு” என்றொருவர் சொன்னால் அது தைரியமான
“குருட்டுத்தனமான முரட்டுத்தன ஐடியாவாகும்” அதையும் வரவேற்கவேண்டும். ஒருவேளை அதில் கூட பிரச்சனையின் தீர்வு இருக்கலாம். பல பிரச்சனைகளில் wild ideas கள்தாம் வெற்றி பெறும். மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டம் எல்லாம் முதலில் wild idea வாக இருந்ததுதான். பின்னால் அதுவே உபயோகமான ஐடியாவாக மாறியது.
4.Combine and improve ideas : இரண்டு மூன்று யோசனைகளை ஒன்றாக்குதல்.
இரண்டு யோசனைகளை ஒன்றாக்கி வைத்தல். பல ஐடியாக்கள் வரும் போது அதில் சில ஐடியாக்களை ஒன்றாக்க முடியும். ஏன் தொழிலாளர்கள் மதியம் உணவு முடிந்து லேட்டாக வருகிறார்கள் என்றொரு பிரச்சனை இருந்தால்
1. கேண்டீன் தூரமாக இருக்கிறது.
2. வெற்றிலை பாக்குக்கடை தூரமாக இருக்கிறது
என்று இரண்டு யோசனைகள் வரும்.
இந்த இரண்டையும் சேர்க்கலாம். இதன் தீர்வு என்று வரும் போது கேண்டீனையும் பக்கத்தில் கொண்டு அதே வேளையில் கேண்டீன் அருகிலேயே மதியம் மட்டும் திறக்கபடும் கம்பெனி வெற்றிலைபாக்கு கடை தீர்வாக அமையலாம்.
இப்படி பல்தரப்பட்ட ஐடியாக்களை பெற்ற பிறகு ஒவ்வொன்றின் நன்மை தீமை பற்றி அலசி ஆராய்ந்து பிரச்சனைக்கு எளிதான தீர்வை கண்டு அடையலாம்..
இதுதான் Brainstorm யுத்தி.
வீட்டை விட்டு வெளியே டூர் போகும் போது கடிகாரத்தின் பேட்டரியை கழட்டி வைத்து வந்த உடன் பேட்டரியை போடலாமே என்பதை சாதரணமாக ஒருவர் சொல்ல வெட்கப்படுவார். ஆனால் Brainstorm வகையில் அதை கூச்சமில்லாமல் சொல்லுவார்.
அதை Wild idea வாக ஏற்றுக் கொண்டு அதன் நன்மை தீமையை அலசுவார்கள்.
நன்மை - பேட்டரி மிச்சமாகும், செலவு குறைவும்.
தீமை - ஒருவேளை டயல் சுத்தாமல் இருந்தால் அதில் அழுக்கு போய் அடைத்துக் கொண்டு கடிகாரம் ரிப்பேராகும்.
அடிக்கடி கடிகாரத்தை எடுத்து பேட்டரி மாற்றும் போது அது உடையலாம். ரிஸ்க் அதிகம்.
ஆகையால் டூர் செல்லும் போது பேட்டரி கழட்டி வைக்கும் ஐடியா நிராகரிக்கப் படுகிறது.
ஒருவேளை ஒரு பேட்டரி விலை ஒரு லட்ச ரூபாய் ஆகிரது என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது அதே டூர் செல்லும் போது பேட்டரி கழட்டி வைக்கும் ஐடியா ஏற்றுக் கொள்ளப்படும்.
Brainstorming யின் நோக்கம் அப்படி புது புது ஐடியாக்களை கொண்டு வர சுதந்திரமாய் சிந்திக்க தூண்டுவதுதான்.
இந்த Brainstorming க்கு Chatham House Rule ஐ அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
Chatham House Rule என்றால் என்ன?
அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் நடக்கிறது. அங்கே பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. சிலது கூடுதல் இருக்கும். சிலது குறைவாக இருக்கும். சிலது மொக்கையான கருத்தாய் இருக்கும். சிலக் கருத்துக்கள் முட்டாள்தனமாய் இருக்கும். ஒவ்வொரு கருத்துக்களை ஒவ்வொரு நபர்கள் பேசியிருப்பார்கள்.

Image result for Alex Faickney Osborn
Chatham House Rule என்ன சொல்கிறது என்றால் மீட்டிங் முடிந்ததும் வெளியே வரும் போது, வந்த பிறகு, அம்மீட்டிங்கில் பேசப்பட்ட கருத்துக்களை எடுத்து விவாதிக்கலாம். சமயத்துக்கு ஏற்றால் போல “அன்னைக்கு மீட்டிங்கல இதப் பேசினோமே” என்று ரீகால் பண்ணலாம்.
ஆனால் அக்கருத்துக்களைச் சொன்னவர்களின் பெயர்களை வெளியே சொல்லக் கூடாது.
“நீ அன்னைக்கு மீட்டிங்கல இப்படிச் சொன்னியே மொக்கையா. அடிப்படை அறிவில்லாம” என்று சொல்லக் கூடாது.கேலி பேசக் கூடாது. அது Chatham House Rule க்கு எதிரானது.
கருத்துக்களைப் பேசலாம். அந்தக் கருத்துக்களை பேசியவர்கள் பெயரைச் சொல்லக் கூடாது.
இந்த ரூலை கம்பெனிகளில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த பிறகே நிறைய யோசனைகள் தைரியமாக சொல்லப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் வீடுகளில் கூட Brainstorming செய்து பார்க்கலாம்...
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஐடியாக்கள் உங்களுக்கு வரும்.
யாருக்கு அதிகம் தெரியாது என்று நினைக்கிறீர்களோ அவரே கூட முக்கியமான தீர்வை சொல்ல வாய்ப்பிருக்கிறது.

0 comments:

Post a Comment