Showing posts with label Surya Xavier. Show all posts
Showing posts with label Surya Xavier. Show all posts

Sunday, January 20, 2019

மூங்கில்வனம் 5 - சூர்யா சேவியர்

தாமிரபரணி என்று தான் இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கு புராணங்கள்,சங்க இலக்கியங்கள்,ஆய்வுகள் என பலதும் பல தகவல்களைக் கூறுகிறது.
தாமிரபரணியை தாமிரவருணி என்று சிலர் அழைக்கிறார்கள்.வருண பகவான் மழையைப் பொழிவதால் தாமிரவருணி என்கிறார்கள். இது ஏற்புடையதல்ல. ஏனெனில் எந்தப் பகவானும் மழையைப் பொழிவிப்பதில்லை என்பது விஞ்ஞானம்.
வியாசரின் மகாபாரதம்,வால்மீகி இராமாயணம்,காளிதாசரின் ரகுவம்சம் ஆகிய நூல்கள் தாமிரபரணி என்றும் தாமிரபருணி என்றும் கூறுகிறது.
சங்க இலக்கியங்களில் தாமிரபரணி தன் பொருநை,பொருநை என்று கூறுகிறது. தன் பொருநல் என்கிறார் நம்மாழ்வார். சிலப்பதிகாரம் சேரனை பொருநைப் பொறையன் எனப் போற்றிப் பாடுகிறது. சேக்கிழாரின் பெரியபுராணம் பாண்டிய நாட்டை பொருநைப் புனல் நாடு என்கிறது.
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருந்தி என்கிறார் கம்பர். அழகர் கருணைப் போல பொருநை பெருகி வரும் அழகைப் பாரும் பள்ளீரே என்கிறது முக்கூடற்பள்ளு.தமிழ் கண்டது வையையும் பொருநையும் என்கிறார் பாரதியார்.1013 இராஜராஜன் கல்வெட்டில் தன் பொருந்தம் என்று கூறுகிறது.
திருநெல்வேலி வரலாற்றை எழுதிய ஆய்வாளர் பிஷப் கால்டுவெல் கிமு 3 ம் நூற்றாண்டுவரை இலங்கை தீவும் தம்பரப் பன்னி, தாம்ர பன்னெ,தாம்ப பன்னி என்று அழைக்கப்பட்டுள்ளது என்று அசோகர் கல்வெட்டினை ஆதாராமாகக் கொண்டு கூறுகிறார்.இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறியவர்களால் அதே பெயரில் தாம்ப பன்னி என அழைக்கப்பட்டு தாமிரபரணியாக ஆகியிருக்கிறது என்பது அவருடைய ஆய்வு.
தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான உறவுகள் வரலாற்றின் ஆதிப்பக்கங்களில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.கிரேக்க, அரேபிய,சீனக் குறிப்புகளில் இதற்கு முக்கிய இடமுள்ளது.இவை அனைத்திலும் இலங்கை என்று எதிலும் இல்லை. கி.பி.2 ம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் மெகஸ்தனிஸ் இந்தியா வந்தான்.இங்கிருந்து இலங்கை சென்றான். அவனது குறிப்பிலும் அந்தத் தீவை இலங்கை என குறிக்கவில்லை. தாம்ரபனே என்றே குறிப்பிடுகிறான்.
 Image may contain: outdoor, nature and water

இலங்கை வரலாற்றுக்கு அடிப்படை ஆதாரமாக முன் வைக்கப்படுவது மகாவம்சம். இலங்கை பௌத்த வரலாற்றின் மூலநூல் இது. இந்த நூலும் இலங்கைத்தீவை தாமிரபரணி என்று தான் அழைக்கிறது.
தமிழகத்தின் தாமிரபரணிக்கரையில் திருநெல்வேலி இருப்பது போல, இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி உள்ளது. இப்பொழுது யாழ் பல்கலைக்கழகமும் இங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைய இலங்கையும் தாமிரபரணி என்ற பெயரில் அழைக்கப்பட்டது கி.மு.3 ம் நூற்றாண்டுவரை என்கிறது வரலாற்று ஆய்வுகள்.அப்படியெனில் தாமிரபரணி அங்கும் சென்றதா? அங்கு சென்றிருந்தால் இபபோது ஏன் தீவாக இருக்கிறது. 3 ம் நூற்றாண்டில் என்ன நடந்தது?
தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான உறவுபற்றி ஒரு கதை மூலம் சொல்லப்படுகிறது.
இசையால் அகிலத்தை வெல்ல ஒவ்வொரு நாடாக செல்கிறான் இராவணன். பலரை போட்டியில் வென்று அடிமையாக்குகிறான். பொதிகை அவனை ஈர்க்கிறது. அகத்தியனைக் காண்கிறான்.
போட்டிக்கு தயாரா என ஆணவத்தோடு கேட்கிறான்.
போட்டி துவங்குகிறது.
இராவணன் பாடிய பொழுது பறவைகளும், விலங்குகளும் அசைவற்று நிற்கிறது.வெற்றிக்களிப்புடன் அகத்தியனை
நோக்குகிறான்.அகத்தியன் யாழ் எடுத்து மீட்டத்துவங்கினான்.
தமிழர்களின் இசைக்கருவி யாழ்.யாழின் இசையில் அசையும் பொருள்கள் அசையாமல் நிற்கிறது. பொதிகையில் அனலும்,தொடர்ந்து புகையும் வெளியாகிறது. இராவணன் தோல்வியை ஒத்துக் கொள்கிறான்.
நான் என்ன செய்யவேண்டும் கேள் என்கிறான் இராவணன்.அகத்தியன்
பதில் இதுதான்.பொதிகை போர் அற்ற பூமியாக இருக்கவேண்டும்.
நான் இனி பொதிகையில் போர் தொடுக்கமாட்டேன் என்று போகிறான்
இராவணன்.இந்தக்கதையின் முழுமையை தொல்காப்பியத்தில்
நீங்கள் படிக்கலாம்.
படத்தில் உள்ளது பாணதீர்த்த அருவி.

Wednesday, January 16, 2019

மூங்கில்வனம் - 4 - SURYA XAVIER

"திங்கள் முடி சூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்குமுகில் சூழும் மலை
தமிழ் முனிவன் வாழும் மலை
அங்கையற்கண் அம்மை
திருவருள் சுரந்து
பொழிவதெனப் பொங்கருவி
தூங்குமலை பொதிய
மலையென் மலையே" என்று பொதிகையைப் புகழ்ந்து குறத்தி பாடுவதாக குற்றால குறவஞ்சி கூறுகிறது.
பொதிகையின் உயர்ந்த இடத்திற்கு ஏக பொதிகை என்று பெயர்.இங்கு தான் அகத்தியர் வாழ்ந்ததாக வாய் வழக்கு. இந்த இடத்திற்கு அகத்தியர் மொட்டை என்று பெயர்.இங்கிருந்து கீழே பார்த்தால் ஒரு குளம் தெரிகிறது.இதுவே தாமிரபரணி தன் பயணத்தைத் தொடங்கும் பூங்குளம்.(படத்தில் உள்ளதே பூங்குளம்)
பூங்குளத்திற்கு நேரடியாகச் செல்லும் பாதை இல்லை.அகத்தியர் மொட்டையிலிருந்து காணலாம். அங்கிருந்து 2000 அடி பள்ளத்தில் பூங்குளம் தெரிகிறது.ஏக பொதிகைக்கு அருகே நாக பொதிகை உண்டு.கருவுற்ற பெண்ணைப் போல காட்சி தருகிறது. இங்கு இரவில் ஒளிரும் தன்மை கொண்ட மரங்கள் உண்டு.
பூங்குளத்தைத் தாண்டினால் வரும் அடுத்த இடம் இஞ்சிக்குழி. இங்கு காணி பழங்குடி மக்களின் குடியிருப்பு உள்ளது. காலத்தைக் கணிக்கும் கணியர்களே காணிகள்.யார் அவர்கள்? அகத்தியரால் அழைத்துவரப்பட்டதாகக் கூறுகிறார்கள். குறவர்,பளியர் வரிசையில் பழங்குடி மக்கள் என அரசு குறிப்புகளில் உள்ளது. ஆவோலை வேய்ந்த குடிசைகளே இவர்களின் குடியிருப்பு.
இவர்களின் குடிசை பெரும்பாலும் ஆறு கால்கள் (கம்புகள்) கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. கணவன்,மனைவி,குழந்தை ஆகிய மூவருக்கும் ஆறு கால்கள் என்பதே கணக்கு.கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்றது வைதீகம். இவர்கள் தெய்வம் இல்லாத இடத்தில் தான் குடிசைகளை அமைக்கிறார்கள். தெய்வம் இல்லாத இடம் எது என்பதை அறிவது அவர்களின் தலைவர் மூட்டுக்காணியின் பொறுப்பு.தெய்வத்தை மனிதர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதே விளக்கம்.
இவர்களுக்குள் கையில்லம்,மூட்டில்லம் என இரண்டு பிரிவுகள் உண்டு.இல்லம் பார்த்தே இல்லறம் செய்கின்றனர்.இல்லம் மாறி காதலிக்க முடியாது. இரத்த வகை சார்ந்தே இந்தப் பிரிவுகள் உள்ளது.இல்லம் மாறி காதலித்தால் முதுகில் கல் ஏற்றி தண்டனையும் உண்டு. இவர்களின் குல தெய்வம் தம்பிரமுத்தான்.மலையில் கண்ணாடி பாறை அருகே தம்பிரமுத்தான் கோவில் உள்ளது. கொக்கரை எனும் இசைக்கருவி இசைத்து வழிபாடு நடக்கிறது.
இஞ்சிக்குழியைக் கடந்தால் அடுத்து வரும் இடம் துலுக்கர் மொட்டை.துலுக்கர் என்பது இஸ்லாமியர்களை குறிப்பதாக உள்ளது.துலுக்கர் என்பது துருக்கர் என்பதன் மறுவலே.துருக்கியர்கள் இந்தியாவிற்குள் வந்ததன் அடையாளமே.

Image may contain: outdoor and nature
இங்குள்ள துலுக்கர் யார்? சதுரகிரி சித்தர் ராமதேவர் என்பவர் தவம் செய்ததாகவும் அவர் பின்னாளில் யாக்கூப் என்ற பெயரில் இஸ்லாமியராக மதம் மாறியதும் தான் துலுக்கர் மொட்டை என அழைக்கக் காரணம்.
துலுக்கர் மொட்டையை அடுத்து பாண தீர்த்தம்.தமிழகத்தின் ஆதிப் பழங்குடி ஐந்தில் ஒன்றே பாணர்கள். இவர்களால் இது பாண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த பாண தீர்த்த அருவியில் குளிப்பது பேராணந்தம். இந்த மலையில் இருக்கும் மற்றொரு இடம் பாண்டியன் கோட்டை. விக்கிரபாண்டியன் எனும் மன்னனால் கட்டப்பட்ட மூலிகை கோட்டை இது.இப்போது சிதலமடைந்து கிடக்கிறது.சாண்டில்யன் எழுதிய மூங்கில் கோட்டை நாவல் இதைப் பற்றியதே.
இந்தக் கோட்டையிலிருந்து பாபநாசம் வரை 127 முரசு மண்டபங்கள் இருந்ததாக வரலாறு. எதிரிகள் கோட்டைக்குள் வந்துவிடாமல் இருக்க முரசு கொட்டி கோட்டைக்கு தகவல் தெரிவிப்பது. இதன் மையமான இடத்திற்கு கொட்டும் தளம் எனப் பெயர்.மலையில் மின்சாரவாரிய ஊழியர்கள் தற்போது இருக்கும் லோயர் கேம்ப் பகுதியே கொட்டும் தளம்.
தமிழகத்தின் பலருக்குமான 64 குல தெய்வங்கள் ( சாஸ்தாக்கள்) ஒருங்கே அமையப்பட்ட கோவில் இங்கு உண்டு. தாமிரபரணி ஆறு கோடு கிழித்தப் பாறையின் நடுவே உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில். இந்தக் கோவிலின் வரலாறை பிறகு அறியலாம்.இந்தக் கோவில் வரலாறை 2001 ம் ஆண்டு நூலாக எழுதியுள்ளேன்.
தாமிரபரணி பூங்குளத்தில் புறப்படும் முன்பே பேயாறு,சிற்றாறு,உள்ளாறு ஆகிய மூன்று நதிகள் கலந்துவிடும்.காரையாறு,மயிலாறு,பாம்பாறு ஆகிய மூன்றும் பாணதீர்த்தத்திற்கு முன்பு தாமிரபரணியில் கலந்துவிடுகிறது. இந்த ஆறு ஆறுகளை இணைத்துக் கொண்டு காரையாறு அணையை அடைகிறது. அந்த அணை கட்டிய வரலாறு துயரமும் மகிழ்ச்சியும் கலந்தது.
தாமிரபரணி மூங்கில் வனத்துக்குள் பாய்ந்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணியை நாளை அறியலாம்.தாமிரபரணியின் துணை ஆறுகள் 137. இத்தனை குழந்தைகளையும் அணைத்துக் கொண்டே தாமிரபரணித்தாய் செல்கிறாள்

மூங்கில்வனம் 3 - சூர்யா சேவியர்

அந்த மலைத்தொடர் மிகவும் உயரமானது.கடல் மட்டத்திலிருந்து 6800 அடிகள்.எப்போது மழை பெய்யும்,எப்போது மழையை நிறுத்திக் கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது.சந்தன மரங்கள் அடர்ந்த பகுதி.இப்போது மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுவிட்டது.
250 சதுர கிலோ மீட்டர் அடர்ந்த காடுகளையும்,படர்ந்த மரங்களையும் கொண்ட பகுதி.மழை பெருக்கெடுக்கும் காலங்களில் இங்கு வெள்ளமும் பெருக்கெடுக்கும்.மற்ற காலங்களில் நீர் ஊற்றாகக் கசிந்து கொண்டிருக்கும்.ஐந்து உயரமான சிகரங்களைக் கொண்ட இடமே சந்தனப் பொதிகை.
பொதிகை என்றால் ரகசியம் என்று பொருள். பொதி என்றால் பிணைப்பு, தொகுதி, முளை, அரும்பு என்ற பொருளும் உண்டு.பூமியில்
அணுக்கள் ஒன்றாக இணைந்து வெப்பம் தனிந்து இறுகிய இடம் எனும்
பொருளில் பொதிகை எனப்படுகிறது. செடி,கொடிகள் அரும்பும் முதல்
இடம் இதுதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதிகையை ஏகபொதிகை,நாக பொதிகை என பிரித்துள்ளார்கள்.ஏக பொதிகையில் இருந்து வலது புறமாக 5 கிலோமீட்டர் தொலைவில் நாகபொதிகை உள்ளது.
புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்திகள் வரை அனைத்தும் பொதிகையில் உண்டு.குலவு,புலவு.சர்க்கரை வேம்பு,பாப்பிக் கொடி,கருநீலி,மயிற்சிறகை,கட்டுக் கொடி,செருப்படை போன்ற மூலிகைகளும்,தாவரங்களும் அடர்ந்து கிடக்கும்.
பளிங்குகாய்,கல் தாமரை,கீரிக்கிழங்கு, பொன்கொரண்டி ஆகிய மருத்துவ மூலிகைகளும் ஆலம்,சாலம்,காந்தம்,கூந்தல் உளளிட்ட 10 வகை பனைகளும் உள்ளன.கல்வாழை, ஞாற வாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் உள்ளன.
உலகின் முதல் மலைகளுள் ஒன்று என்றால்,மொழியும் இங்கிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும்.தமிழ் பிறந்த மலையும் இது.இங்குள்ள பரதேசிபடவு என்ற இடத்தில் தமிழின் வட்டெழுத்துக்கு முந்தைய ஆதி 15 எழுத்துகள் உள்ளன.யாரும் இதுவரை படித்தறிய முடியவில்லை.
எப்போதும் பறவைகள்,விலங்குகளின் சத்தம் கேட்கும் இந்தக் காட்டில் நீர் ஓடி வரும் அழகைக்காண கோடி கண்கள் வேண்டும்.26 சுனைகளில் துளித்துளியாக சேர்ந்த நீர் ஓரிடத்தை அடைகிறது.அந்த இடத்தைச் சுற்றி அழகிய கருடமலர்கள் பூத்துக்குலுங்குகிறது. கருடமலர்கள் பூப்பதை வைத்தே மழை பொழிவதை கணக்கிடுகிறார்கள்.அதிகமாக பூத்தால் அந்தக்காட்டில் அடை மழைதான்.

Image may contain: mountain, sky, outdoor and nature
பூங்குளத்தில் உள்ள கருடமலர்கள் பூப்பதை வைத்து மழை பொழிவதை கணக்கிடுவதாகச் சொன்னார்கள்.யார் அவர்கள்? இயற்கையை உடையாகக் கொண்டு வாழும் ஆதிப்பழங்குடியினர் தான்.காணிகள் என அழைக்கப்படுகிறார்கள்.இவர்களுக்கு இணையான வானிலை ஆய்வாளர்கள் ஒருவரும் இல்லை. இன்றும் அங்கு வாழ்கிறார்கள் நவீனத்தின் வாசலுக்குள் வந்தும் வராமலும். காலத்தை கணித்தவர்கள் என்பதால் கணியர்கள் என்பதே காணி என்றானதாகவும் சொல்லப்படுவதுண்டு.
கருடமலர்கள் சுற்றி நிற்கும் அந்த இடத்திற்குப் பெயர் பூங்குளம்.பூக்கள் சுற்றி நிற்பதால் தான் பூங்குளம்.இங்கிருந்து தான் தாமிரபரணி தன் பயணத்தைத் தொடங்குகிறது.இந்த அடர்ந்த மலைக்குள் ஒரு கட்டை மனிதர் வாழ்ந்தார்.அவரைப்பற்றி அறிய மனம் முற்படுகிறது.வேறு யார் அகத்தியர் தான்.அகத்தியரின் வாழ்க்கையை அறியச் சென்றால் அது புராணக்கதைக்குள் செல்கிறது.
அகத்தியரும் ஒருவரல்ல.பல அகத்தியர்கள் வருகிறார்கள்.தாமிரபரணியில் வாழ்ந்தவர் தமிழ் அகத்தியர்.ரிக் வேத காலத்தில் கங்கை கரையில் வாழ்ந்த அகத்தியன் சமஸ்கிருத அகத்தியன். காவிரியில் ஒரு அகத்தியர் உண்டு.அவர் தமிழ் அகத்தியரைப்போல திருமணமாகாதவர் அல்ல.காவேரி,லோப முத்திரை என இரண்டு பெண்களைத் திருமணம் செய்தவர்.
அகத்தியர் யார் என அறியவேண்டுமானால் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் அகத்தியரின் மாணவரே தொல்காப்பியர். அகத்தியர் சித்தர்களின் தலைவர். சித்தர்கள் ரகசியம் நிறைந்தவர்கள். கடவுளை மறுத்தவர்கள்.அகத்தியர் ரகசியங்களின் ரகசியம்.


வாடிவாசல் - சூர்யா சேவியர்

வாடி என்றால் பொதுவான இடம் என்றே பொருள். மீன் குவியலாக வைத்திருக்கும் இடத்திற்கு மீன்வாடி என்றும், மர வியாபாரம் நடக்கும் இடத்திற்கு மரவாடி என்றும், விறகு வியாபாரம் நடக்கும் இடத்திற்கு விறகுவாடி என்றும் பெயர்.
லின் முகப்புப் பகுதியில் தென்கலை வைணவக் குறியீடு இருக்கும். வடகலை, தென்கலை என்பதெல்லாம் வடமொழி, தென் மொழி சார்ந்ததே. இராமானுஜரின் தென்கலை வைணவர்களே திருமலை நாயக்கர்கள். இவர்கள் காலத்தி தான் காளைகள் வாடிவாசல் என்று அமைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.
பெண்களை வாடி - போடி என்றும்,
வாமா -போமா என்றும்,
வாடா-போடா என்றும்,
"பா' என்றும் "செல்லம் - குட்டி' என்றும் அழைப்பது அனைத்து ஆண்களின் வழக்கமாக இருக்கிறது.
என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறார்கள்?

(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்) இதற்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.
"மா' என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைப்பது.
"பா' என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைப்பது.
"டா' என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைப்பது.
அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் நினைப்பது.
"குட்டி' என்று அழைப்பது குழந்தைக்கு நிகராகவும்,
"செல்லம்' என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும் அழைக்கிறார்கள்.
"டி' என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
" டி" என்பது எந்த உறவுமற்ற பொதுச் சொல்லே.
"டி' பயன்படுத்தத் தொடங்கும் காலம்
90 நாட்களுக்குப் பிறகே.
 Image result for வாடிவாசல்

கணவன் " டி" போட்டுப் பேசத் தொடங்கினால் மனைவி அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.
கொளுத்திப் போடுவோம்.
அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு எடுத்த படம்.
ஆதிகாலத்தில் துளசி நிறைந்த காட்டுப்பகுதி இது.
அலங்கை என்றால் துளசி என்றே பொருள்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர்.வாடி என்பது சந்தை சார்ந்த சொல் என்பதால் வியாபாரிகளை இங்குள்ளவர்கள் மார்வாரிகள் என்றழைக்காமல் மார்வாடிகள் என்றார்கள்.
வணிகர்கள் கூடும் இடமாக ஆலமரம் இருந்தது.ஆலமரத்தடியின் அடியிலேயே பெரும் சந்தைகள் கூடும்.இந்த வணிகர்களே பனியா என்றழைக்கப்பட்டவர்கள். இதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆலமரத்தை தங்களின் ஆங்கில அகராதியில் இணைத்த சொல்லே பானியன் ட்ரீ என்பது. இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொல்லே பானியன்.

Tuesday, January 15, 2019

பொங்கல் தமிழர்களின் பண்டிகையா? SURYA XAVIER

பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்பதற்கும்
தமிழர்கள் சாதி மதம் அற்றவர்கள் என்பதற்கும் இந்த ஒன்றும் உதாரணம்.
பொங்கல் அன்று விளக்கின் முன்பு தீபம் ஏற்றி உழைக்கும் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி,கிழங்கு வகைகளை வைப்பார்கள்.
இந்த கிழங்கு வகைகளில் சேனை,சேம்பு, கருணை,சிறுகிழங்கு,பனங்கிழங்கு கண்டிப்பாக இடம் பெறும்.
இந்த ஐந்து கிழங்குகளும் காலங்காலமாக பெருந்தெய்வக் கோவில்களுக்குள் எடுத்துச் செல்லமுடியாது.
ஏனெனில் உழைத்தவர்கள் உருவாக்கிய பொருட்கள் அவைகள்.அவை தீட்டான பொருட்களாம். புனிதம்,தீட்டு என்பதெல்லாம் ஆதிக்க வர்க்க மதிப்பீடுகளே.
விவசாயம் செய்வது இழிவான செயல் என்கிறான் மனு.
பிராமண,ஷத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்த போதும், உடல் முயற்சியும்,பிறர் தயவை நாடத்தக்கதாகவும் உள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. (மனுதர்மம் 10:83)
உழைப்பவர்கள் குறித்து மாமேதை ஏங்கெல்ஸ் கூறும் இக்கருத்து மனுவிற்கு சாட்டையடி.

Image may contain: flower and plant
"முழுமையாக உழைக்கும் மக்கள் கூட்டமானது,அவர் தம் இன்றியாமையாத உழைப்பில் முழுக்கவனமும் செலுத்தி வருவதால், அவர்களுக்கு உழைப்பின் தன்மை,சட்டப் பிரச்சனைகள்,அரசு விவகாரங்கள்,கலைஅறிவியல் போன்ற சமூகத்தின் பொதுவான விபரங்களை கவனிக்க நேரமில்லாமல் போகிறது.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு தனி வர்க்கம் தன்னை உழைப்பிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டு மேற்கண்ட விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையைத் தனதாக்கிக் கொள்கிறது
அத்துடன் தனது சொந்த நலனுக்காக,
உழைக்கும் கூட்டத்தின் மீது மேலும் மேலும் உழைப்பின் சுமையைத் திணிக்கிறது".(osipov:1969,51)
கூடுதல் தகவல்.
காய்கறிகள் என்று நாம் சொல்கிறோம்.
காயோடு கறியை ஏன் சேர்த்துச் சொல்கிறோம்?
கிபி 15 ம் நூற்றாண்டில் சிலி நாட்டிலிருந்து மிளகாய் இங்கு வந்து சேர்ந்தது.
அதற்கு முன்பு உணவில் உரைப்பிற்காக கருப்பு மிளகு பயன்படுத்தப்பட்டது.
இந்த கருப்பு மிளகிற்கு கருங்கறி என்று பெயர்
காயும்-கருங்கறியும் இணைந்து இருந்ததால் காய்கறி என்று வழங்கப்படுகிறது.
பொங்கல் எந்த மதம் சார்ந்த பண்டிகையும் அல்ல.
உழைப்பவர்களின் பண்டிகை.

Sunday, January 6, 2019

மூங்கில்வனம் 2 - சூர்யா சேவியர்

பிரபஞ்சப் பெருவெடிப்பு என்கிறது விஞ்ஞானம்.இந்தப் பெருவெடிப்பில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கொதிக்கும் பாறைப் பிழம்பாக பிறந்ததே பூமி.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெய்த மழையினால் குளிர்ந்து நீரால் நிரம்பிய நீர் கோளமாக பல காலம் இருந்தது.நீர் ஆவியாகிச் செல்ல நிலப்பரப்பு வெளித் தோன்றி நீரில் மிதந்தது.நீர்ப்பரப்பெங்கும் சிதறிக்கிடந்த நிலச்சிதறல்கள் 2500 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமத்திய ரேகையை ஒட்டி ஒன்று சேர்ந்து ஒரு மாகண்டமாக ( SUPER CONTINENT)
உருவெடுத்தது. இந்த ஒரே கண்டத்திற்கு பாங்கீ கண்டம் என்று பெயர்.

அதன் பின்னர் 1200 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஒரே மிதவைக் கண்டம் உடைந்து பிரிந்தது.இரண்டாகப் பிரிந்த இந்த கண்டங்களுக்கு லாராஷியா,கோண்ட்வானா என்று பெயர்.
இரண்டாக பிரிந்த கண்டம் மேலும் பிரிந்து தற்போது ஏழாக உள்ளது.

ஆரம்பத்தில் ஆப்பிரிக்கா,மடகாஸ்கர், செசல்ஸ் தீவுகளோடு இணைந்த மலைப்பகுதியானது 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புவிஇயல் மாற்றத்தால் விலகியது.80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளின் தொகுப்பே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்.




Image may contain: mountain, sky, cloud, outdoor and nature


கண்டங்கள் நகர்ந்து மோதிக் கொண்டு புதிய நிலப்பரப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்த போது மனிதன் தோன்றவில்லை.மனிதன் பூமியில் தோன்றி கொஞ்ச வருடங்கள் தான் ஆகிறது.40 லட்சம் வருடம் தான். அதிலும் நியாண்டர்தால் மனிதன் இன்றைய நவீன மனிதனாக மாறி 40 ஆயிரம் வருடம் தான் ஆகிறது.

கோண்ட்வானா பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் மூத்த மலைகளுள் ஒன்று.வடக்கே குஜராத்தின் தபதி நதிக்கரையில் தொடங்கி தெற்கே குமரிக்கடலில் மூழ்கிக்கிடக்கிறது. தற்போது இருப்பது 1600 கிலோமீட்டர் மட்டுமே.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் 900 மீட்டர்.60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.கேரளாவின் ஆனைமுடி மலை தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான பகுதி.இதன் உயரம் 2695 மீட்டர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் 5000 பூக்கும் தாவர வகைகளும்,139 பாலூட்டிகளும்,508 வகையான பறவைகளும்,176 வகையான இரு வாழ்விகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மலைத்தொடரில் ஏராளமான நதிகள் உருவாகி ஓடினாலும் கோதாவரி,கிருஷ்ணா,காவிரி,தாமிரபரணி ஆகிய நதிகள் முக்கியமானவை. மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி உருவாகினாலும் அதன் தாய்வீடு பொதிகை மலையே.சாதாரண பொதிகை அல்ல.சந்தனப் பொதிகை.

ஆமா
பொதிகை என்றால் என்ன?

மூங்கில்வனம் 1 - சூர்யா சேவியர்

பூமிப்பந்து ஆதியில் வனங்களால் நிறைந்தது
வனங்களுக்குள் புகுந்த மனிதக்கூட்டம் அதை சீரமைத்து தனக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது.

வனங்கள் நிறைந்த பகுதிகளில் சமவெளியின் அடையாளத்தை ஆதி மனிதனுக்கு எது காட்டியிருக்கும்?
நதிகள் மட்டும் தான்.
நதிக்கரை வனங்கள் அகற்றப்பட்டு சமவெளிகள் உருவாக்கப்பட்டது.
நதியின் பெயரை வைத்து
சமவெளி நாகரீகங்கள் உருவானது.

இதன் தொன்ம அடையாளங்கள் இன்றும் தொக்கி நிற்கிறது.
புளியமரக் காட்டுப் பகுதியே
இன்றைய திண்டிவனம்.

தில்லை மரக்காடு தான்
தில்லை வனம்.

கடம்ப மரக்காடு தான்
கடம்ப வனமான
இன்றைய மதுரை.
மதுரை என்பதும் மருதமரத் துறை என்பதன் மருவிய ஒலிப்பு தான்.






Image may contain: outdoor






மூங்கில் மரக்காடு தான்
மூங்கில் வனம்.
அதைச் சைவம் வேணுவனமாக மாற்றி
திருநெல்வேலியாக மாற்றியது.
சிவன் வேணுநாதர் எனவும் அழைக்கப்படுவார்.
வனநாதரும் அவர் தான் என நிலைநிறுத்தப்பட்டது.

பக்தி இயக்க காலத்தில் இந்தப் பெயர் மாற்றங்கள் வெகுவாய் நடந்தேறின.

மூங்கில் அரிசி உண்டு வாழ்ந்த மக்களே மூங்கில் வன மக்கள்.
நெல் பயன்பாட்டிற்கு முந்தையது
மூங்கில் அரிசி பயன்பாடு.

நெல் பயன்பாடு உருவாகி பத்தாயிரம் ஆண்டுகள் ஆகிறது.
அப்படியெனில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையப் பாரம்பரியமே மூங்கில் வனப் பாரம்பரியம்.

இந்த ஆண்டு முழுமையும் மூங்கில் வனத்திற்குள் சுற்றி வரலாம்.
வாங்களேன் ஒரு எட்டு போயிட்டு வருவோம்.

Sunday, December 16, 2018

கிறிஸ்மஸ் தாத்தா யார்? சூர்யா சேவியர்

கிறிஸ்தவ வேதநூல்கள் எதிலுமே இல்லாத ஒன்று கிறிஸ்மஸ் தாத்தா. யார் இவர்?எப்படி உலகம் முழுமையும் அறியப்படுகிறார்?இதன் பின்னணி என்ன?
இதிலும் யூத மற்றும் ஐரோப்பிய-அமெரிக்க வணிக அரசியல் ஒளிந்துள்ளது.
கி.பி.4 ம் நூற்றாண்டில் துருக்கியின் சிமிர்னாவில் பேராயராக இருந்தவர் நிக்கோலஸ்.இவர் மிகப் பெரிய செல்வந்தர்.ஏழைகளுக்கு உதவுபவர். குழந்தைகளிடம் இனிமையாகப் பழகுபவர்.இவரின் எளிய நடவடிக்கை பலரையும் இவர்பால் ஈர்க்கச் செய்தது. கத்தோலிக்கம் இவரை புனிதராக திருநிலைப்படுத்தியது.
இவரை மையமாக வைத்து 1822 ல் டாக்டர் கிளமெண்ட் மூர் எனும் கவிஞர் ஒரு கவிதை எழுதுகிறார்.இந்தக் கவிதையின் நாயகன் நிக்கோலஸ் தான். ஆனால் அந்த கவிதையில் நிக்கோலஸை சாண்டா கிளாஸ் எனும் புனைவுப் பெயரில் அழைக்கிறார். ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் என்பதே கவிதையின் துவக்கம்.
இந்தக் கவிதையில் வரும் பாத்திரங்களுக்கு ஒரு அமெரிக்க ஓவியர் வரைந்த உருவமே அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பனிச்சறுக்கு வண்டி ஒன்றை ஒன்பது கலைமான்கள் இழுத்துச் செல்வதும், அதில் கம்பீரமாக சாண்டா கிளாஸ் எனும் நத்தார் தாத்தா செல்வதையும் காண முடிந்தது.
அந்த மான்கள் ஒவ்வொரு வீட்டின் கூரைகள் மீதும் பறந்து செல்லும். செல்லும் போது புகை கூண்டின் வழியே தாத்தா குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
அழகிய சிவந்த கன்னங்கள்,பழுப்பு நிறத்தாடி,சிறிய வாய்,பெருத்த தொப்பை, சிவப்பு நிற மேலாடை,பனிக்காலத் தொப்பி,தோளில் ஒரு மூட்டை ஆகியவை இணைந்த உருவமே சாண்டா கிளாஸ்.இந்த உருவம் தனது வீட்டு தோட்டக்காரரின் உருவத்தை வைத்து கவிதை எழுதியாக கிளமெண்ட் மூர் சொன்னாலும் அதன் பின்னணி வேறு.
தோர் எனும் ஜெர்மானியக் கடவுளை கொம்புகளுள்ள இரண்டு மான்கள் இழுத்துச் செல்வதைப் போல புனையபபட்ட புராணக்கதையின் வடிவமே இது.இந்தக் கடவுளுக்கு யூல்
என்ற பிறப்பின் பண்டிகை கொண்டாடப்படுவதும் கவனத்திற்குரியது.
மான் கொம்புகளை வீட்டுச் சுவற்றில் மாட்டி வைக்கும் வழக்கம் தோர் கடவுளின் நினைவாகவே.மேலும் நிலவை நோக்கி மான்கள் பறந்து செல்வது பாபிலோனியர்கள் வணங்கிய நிம்ரோத் எனும் தெய்வமே.நிம்ரோத் என்பது சூரியக் கடவுளே. அந்த சூரியக் கடவுளின் பண்டிகை டிசம்பர் 25.
இங்கு தான் யூத மற்றும் ஐரோப்பிய-அமெரிக்க வணிக அரசியல் நிலைநிறுத்தப்படுகிறது. கிபி 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிரியார் நிக்கோலஸை 1800 களில் கவிதையாக எழுதவும்,அதன் மூலம் கிறிஸ்மஸ் தாத்தா உருவாகவும் எது காரணம்?

Related image

1750-1850 என்ற இந்த நூறு ஆண்டுகளே ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவில் தொழிற் புரட்சி நடந்த காலம். தொழிற்புரட்சி புதிய உற்பத்தி கருவிகளை கண்டறிந்தது. தொழிற் புரட்சியின் துவக்கம் பஞ்சாலைகள் சார்ந்ததே. துணிகளும் அதைச் சார்ந்த விழாக்களும், விழாக்களையொட்டிய பரிசுப் பொருட்களும் அன்றைய சந்தையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டன. அதன் விழா வடிவமே கிறிஸ்மஸ் தாத்தா உருவாக்கமும் அவர் பரிசு தருவார் என்ற கதையும்.
இன்று உலகில் 210 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். மேற்குலக முதலாளிகளுக்கு கிறிஸ்துவை விட கிறிஸ்மஸ் தாத்தாவே தேவை.ஏனெனில் அவரே உற்பத்தியான பொருளை சந்தைப்படுத்துகிறார்.
இதில் இன்னொரு அரசியல் முக்கியமானது.யூதத்திலிருந்து உருவான கிறிஸ்தவத்தை யூதத்திலேயே நிலை நிறுத்தும் வேலையும் உண்டு.யூதத்தின் சூரியக் கடவுளின் பண்டிகை நாளான டிச 25 ஐ யே கிறிஸ்து பிறப்பாக கொண்டாட வைத்தனர்.இதற்கு பயன்படுத்தப்பட்ட நிக்கோலஸ்,கவிதை எழுதிய டாக்டர் கிளமெண்ட் மூர் ஆகியோர் யூதர்களே.

Monday, December 10, 2018

தமிழ்-இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி

தமிழ்-இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி - சூர்யா சேவியர்

தமிழ் என்ற சொல் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு 'தமிதா' என்றும் 'தமிளா' என்றும் உருமாறி பிறகு திராவிடமாகி விட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகிறது. அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை.
நாம் நம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி, தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமன்று. ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பேசப்பட்ட மொழியாகும்.

Image may contain: 1 person, glasses


இது, உண்மையில் இந்தியா முழுமையும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகும்.ஆரியர்கள்,நாகர்கள் மீதும்,அவர்களின் மொழி மீதும் ஏற்படுத்திய தாக்கம், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய் மொழியை விட்டு, அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தோடு கலந்தனர்.
தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள், தமிழைத் தங்கள் தாய் மொழியாக்கிக் கொண்டனர். அவர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப் பார்த்தால், தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் திராவிடர் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பது புரியும்.


தென்னிந்திய மக்களைக் குறிப்பிட சிறப்புப் பெயரான திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும்-நாகர்களும்,திராவிடர்களும் ஒரே இனம் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்விரு பெயர்களும் ஒரே இன மக்களையே குறிப்பிடுகிறது.
நாகர்கள் என்பது இனம் அல்லது பண்பாட்டுப் பெயர். திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிக்கும் பெயராகும்.
எனவே தாசர்கள்-நாகர்கள்-திராவிடர்கள் ஓர் இனத்தவரே. வேறு வகையில் கூற வேண்டுமெனில், இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டு தான். ஒன்று ஆரியர்கள்.
மற்றொன்று நாகர்கள்.
( பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு-7 பக்கம்:300)

இந்து என்பது மதமல்ல

இந்து என்பது மதமல்ல.சட்டங்களின் தொகுப்பே.
மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் கூறினேன். நான் இப்படிக் கூறுவதன் பொருள் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு கலகம் விளைவிப்பதாகத் தோன்றலாம். சிலருக்குப் புரட்சியாகத் தோன்றலாம். எனவே என் நிலைபாடு என்ன என்பதை விளக்குகிறேன்.
இந்துக்கள் மதம் என்று அழைப்பது உண்மையில் சட்டங்களையும் அல்லது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதிநெறிகளைத்தான். இந்த சட்டங்களின் தொகுப்பை, மதமென்று கூறுவதை நான் மறுக்கிறேன். மதம் என்று பெயரிட்டு மக்கள் முன்பு நிறுத்தப்படுகின்ற இது போன்ற சட்டத் தொகுப்பால் விளைகின்ற கேடுகள் பல.
முதல் கேடு:ஒழுக்கத்துடன், சுதந்திரமான, தன்னிச்சையான வாழ்க்கையை இது மறுக்கிறது. மாறாக அது வெளியில் இருந்து திணிக்கப்படும் விதிகளை அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டு நடக்கிற இழிநிலைக்கு வாழ்க்கையைத் தள்ளிவிடுகிறது. கொள்கை எண்ணத்திற்கு இந்து மதம் எனப்படுவதில் இடமில்லை.
கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் நிலைதான் இருக்கிறது. ஆனால், இந்தச் சட்டத் தொகுப்பால் விளைகின்ற பெருங்கேடு என்னவெனில், இச்சட்டங்களே முக்காலத்திற்கும் பொருந்துபவை என்று இருப்பது தான். அனைத்து வகுப்புக்கும் பொதுவான ஒரே சட்டம் இல்லை என்ற வகையில் அது மோசமானது.ஆனால், எத்தனை தலைமுறையானாலும் சரி, இந்த அநியாயம்-அநீதி என்பது நிரந்தரமாக நீட்டிக்கப்பட வேண்டிய ஒன்று என ஆக்கி வைக்கப்பட்டுள்ளதே!

Image may contain: 1 person, glasses and close-up

சட்ட வல்லுநர்கள் அல்லது மகான்கள் என்று அழைக்கப்படுகிற சில மனிதர்களால் இவை ஏற்படுத்தப்பட்டது என்பதால் நான் இதை மறுக்கவில்லை. இதன் இறுக்கமும், மாறாத்தன்மையுடைய குணங்கள் இருப்பதாலேயே, நான் இதை மறுக்கிறேன்.
ஒரு மனிதனின் வாழ்நிலையும், சூழ்நிலையும் மாறும் போது-அந்த மனிதனின் மனநிலை மாறும். அப்படி இருக்கையில், நிரந்தரமான இந்தச் சட்டத் தொகுப்பை எவ்வித மாற்றமுமின்றி, மனித இனம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? எனவே, இது போன்ற ஒரு மதத்தை அழித்தாக வேண்டும் என்று கூறுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை.
இது போன்ற ஒரு மதத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், மதத்திற்கு எதிரானவை அல்ல. சட்டத்திற்கு மதம் என்று தவறாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையைக் கிழித்தெறியுங்கள். இதுவே உங்கள் தலையாய கடமை.
மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த 'மதம்' என்ற தவறான கருத்தை நீக்குங்கள். மதம் என்று தங்களுக்கு கூறப்பட்டது மதமே அல்ல:சட்ட விதிகளே என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
இந்தப் பணியைச் செய்து முடித்ததுமே, மதம் எனக் கூறப்படும் இச்சட்ட விதிகளை சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு அழித்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான தார்மீக பலம் உங்களுக்குத் தானாகவே எழும்.
(பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு:-1, பக்கம்:66)

18 ம் படி என்றால் என்ன? சூர்யா சேவியர்


18 படிக்கு வைதீகம் தன் தேவைக்கேற்ப பல விளக்கங்கள் சொல்லும்.
அது கண்மாய்கரையில் இருக்கும் கருப்பசாமியும் தன் கடவுளின் அவதாரம்,அம்சம் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை தன்னுள் ஈர்க்க வைக்க பல்லிளித்தக் கதை.
திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நம்பூதிரி பார்ப்பனர்கள் உண்டு. இவர்கள் தங்களை கடவுளுக்கு அடுத்த நிலையில் தாங்கள் தான் என்று சொல்லிக் கொள்வார்கள். இவர்களால் அப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதிகள் 18.
1.சாணார் (நாடார்)
2.கருமறவர் (செங்கோட்டை மறவர்)
3.பாணர்
4.குயவர்
5.நசுரானியர்(சிரியன் கத்தோலிக்கர்)
6.துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை)
7.குறவர்
8.ஈழவர்-தீயர்
9.வாணியர்
10.புலையர்
11.பறையர்
12.கம்மாளர்
13.கைக்கோளர்
14.இடையர்
15.நாவிதர்
16.வண்ணார்
17.பரவர் (தீவாரர்)
18 சக்கிலியர் (தெலுங்கர்)
இந்த 18 க்கும் மேலே தான் நாயர்களும்-நம்பூதிரிகளும் என்ற பொருளில் நம்பூதிரிகளால் நிலைநிறுத்தப்பட்ட 18 படி மேலே உள்ள ஐயப்பன். இந்த 18 சாதிகளுமே தோள் சீலை மறுக்கப்பட்ட சாதிகள் தான்.
18 பட்டியைக் கூட்டுடா என்ற பஞ்சாயத்துச் சொல்லும் இதையொட்டியதே.
18 சாதியையும் ஊர் அம்பலத்தில் கூட்டி தண்டனைகள் மற்றும் வரிகள் தீர்மானிக்கப்பட்டது.
பிராமணீய வைதீக கடவுள்களை
18 சித்தர்கள் கடுமையாய் சாடினர்.கிண்டல் கேலி செய்து மூடத்தனத்தை எதிர்த்தனர். கடவுளை வணங்கினால் நோய்
தீராது என்று வைத்தியம் செய்தனர்.
நட்ட கல்லும் பேசுமோ என்று
கேட்டனர்.இது இங்கு புதிதாய் காலூன்றிய வைதீக மதம் இந்த சவாலை சதிமூலம் தீர்வு கண்டது.18 சித்தர்கள் அழகர் மலை வந்திருந்தனர்.
அவர்கள் அழகர் கோவில் பொக்கிஷத்தை கொள்ளையடிக்க
வந்திருப்பதாய் பட்டரின் கனவில் கடவுள் சொன்னதாய்கூறி
18 பேரை வெட்டும்படி கூறப்பட்டது.மூடர்கள் வெட்டிச் சாய்த்தனர்.
அதன்பிறகு வைதீகமதம் நிம்மதியடைந்து அந்தப் 18
சித்தர்களை மிதித்தே தங்களின் கடவுள் மேலேறியதாய் பொருள்
கொண்டு 18 படிகளை அமைத்தனர்.அதுவே 18 ம்படியாகும். சித்தர்கள் காலம் 800 முதல் 1000 என வரையறுத்துள்ளனர்.
அழகர் கோவில் வரலாறு என்ற நூலை பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வெளியிட்டது. சித்தர்கள் பற்றிய பதிவின் குறிப்புகள் அதையொட்டியதே.
18 படி குறித்த பார்ப்பனியக் கதையை மறுத்து,சாதிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய வரலாற்றை, சமூக சீர்திருத்தப் போராளி நாராயண குரு வரலாறில் படிக்கலாம்.
Image result for ayyappan and 18 steps

சமூக சீர்திருத்தமே நமது மரபு - சூர்யா சேவியர்

சமூக சீர்திருத்தமே நமது மரபு
-தோழர். பினராயி விஜயன்
(16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து....)
சமூக சீர்திருத்த மரபு தான் நமது மகத்தான மரபு...
நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத் தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்டவை. அதனால்த்தான் “இது ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்”, என்று விவேகானந்தரால் விமர்சிக்கப்பட்ட இந்த மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாக முன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கே நமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், நமது மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எந்த காலகட்டங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அந்த காலகட்டங்களில் எல்லாம் அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கி இருக்கிறார்கள். அந்த பிரிவினரில் பிற்போக்கு சக்திகள் மட்டும் பங்கெடுக்கவில்லை.
சமூக சீர்திருத்தங்கள் மூலம், உரிமைகள் அடைய வேண்டிய, நன்மைகளைப் பெற வேண்டிய, பலனடைய வேண்டிய பிரிவினர் யாரோ அவர்களை, அன்றைய நம்பிக்கைகளின், சம்பிரதாயங்களின் சக்திகளைப் பயன்படுத்தி சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு எதிராக அணி வகுக்கும்படி செய்ய பிற்போக்கு சக்திகளால் முடிந்தது.
நமது நாடு பார்த்த மிகக் கொடூரமான சடங்கு, சதி என்ற ஒன்றாகும். கணவர் இறந்துவிட்டால், மனைவியை கணவரின் அந்த சிதையில் தள்ளிவிடும் வழக்கம்....ஒரு மூட நம்பிக்கை. அந்த சதி என்ற வழக்கத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. அது சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலானால் மட்டுமே நடந்தது.
நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், அன்றைய கணக்குப்படி 1813 முதல் 1829 வரையிலான காலகட்டத்தில் 8135 பெண்கள் சிதையில் குதித்து உயிரிழந்தார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்ந்திருந்தால், எத்தனை ஆயிரம், எத்தனை லட்சமாகியிருக்கும் என்று கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம்...என்ன ஆகியிருக்கும் நமது நாட்டின் நிலைமை? ஆனால் இந்த சடங்கின், மூடநம்பிக்கையின் பெயரில், இந்த வழக்கத்திற்கெதிராக சட்டம் இயற்றப்பட்ட பிறகும், பெண்கள் இதுபோன்று சிதையில் குதிக்க முயன்றார்கள்....சிலர் குதிக்கவும் செய்தார்கள். அதற்கெதிராக பெரிய எதிர்ப்புகளும் கிளம்பின.
இங்கே இ.எம்.எஸ், வி.டி, எம்.ஆர்.ஜி, பிரேம்ஜி போன்றவர்கள் எல்லாம் அன்றைய பிராமண சமுதாயத்திலிருந்த தவறான வழக்கங்களுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டகளைத் தொடங்கினார்கள். அதன் பகுதியாக விதவை மறுமணம் சாத்தியமாகும் நிலை வந்தது. அதுபோல, அன்றைய சமூகத்தில் இருந்த வித்தியாசமான சூழலின் அடிப்படையில் இளம்பெண்களை, அதாவது பருவமடைவதற்கு முன்பாகவே, சிறுமிகளை படுகிழவர்களுக்கு மணம் முடித்து வந்தார்கள். அந்த சிறுமிகள் பருவமடைவதற்கு முன்பே அந்த கிழவனின் கதை முடிந்துவிடும். பின்பு அந்தச் சிறுமி தலை மொட்டையடிக்கப்பட்டு இருட்டறையில் அடைந்து கிடக்கவேண்டும். அதற்கெதிராக முன்பு குறிப்பிடப்பட்டவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தத் துணிந்த போது அவர்களை ஜாதி விலக்கம் செய்ய முடிவெடுத்தார்கள்....பயமுறுத்தப்பட்டார்கள்...பிற்போக்காளர்களின் கடுமையான எதிர்ப்பும் இருந்தது.
நமது நாட்டில் சில இடங்களில் மனிதப்பலி கொடுக்கும் முறை இருந்தது. பின்னர், அது மிருகப்பலியாக மாற்றப்பட்டது. மிருக பலியும் செய்யக்கூடாது என்ற நிலை வந்தபோது தான் மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்து கலக்கி இரத்தம் போன்ற திரவத்தை உருவாக்கி அடையாளரீதியாக பலியிடும் முறை வந்தது.
இதெல்லாம் சடங்குகளில் ஏற்பட்ட மாற்றங்களாகும். நமது நாட்டில், நமது மாநிலத்தில் என்னவெல்லாம் வகையிலான மாற்றங்கள்? வழக்கங்கள் என்பது மரபுவழியாக கடைபிடிக்கப்படுபவை ஆகும். அது காலகட்டங்கள் தோறும் மாற்றமடையும். ஒரு காலத்தில் இருப்பது பின்வரும் காலங்களில் இருக்கவேண்டும் என்பதில்லை.
முன்பெல்லாம் கோவிலில் நுழைவது என்றால், கோவில் குளத்தில் நன்றாகக் குளித்து, அந்த ஈரத்துணியுடன் தான் செல்லவேண்டும். இப்போது, எல்லோரும் அப்படியா கோவிலுக்குள் நுழைகிறார்கள். உடலை தங்கள் வசதிக்கேற்ப சுத்தம் செய்துகொள்ளுகிறார்கள். ஆனால், கோவிலில் அப்படியே தானே நுழைகிறார்கள்?
முன்பு பெண்களின் விஷயத்தில் என்னவெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தது? மாதவிடாய் வந்துவிட்டால்...அந்தப் பெண்களுக்கு வீட்டில் கூட இருக்கமுடியாது. வசிக்குமிடத்திலிருந்து வெளியே செல்ல முடியாது. வீட்டிலிருந்து தனியே வேறொரு இடத்தில் அதற்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் தங்கிக்கொள்ள வேண்டும்....ஆனால் இப்போது?
எல்லாம் மாற்றங்கள் அல்லவா..?நமது கண் முன்னே ஏற்பட்ட மாற்றங்கள் அல்லவா?

முன்காலத்தில் பிரசவம் நடந்தால் ‘வாலாய்மை” (பிரசவ நேரத்தில் அசுத்தம் என்ற பெயரில் கடைப்பிடிக்கப் பட்ட தீட்டு). மரணம் நடந்தால்...குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் “புலை” (இறப்பினால் ஏற்படும் தீட்டு)..எத்தனை நாட்கள் அதற்கு...?ஆனால் இப்போதோ மரணம் நடந்து சவ அடக்கம் முடிந்தவுடன், ஒருவர் கூறுவார்,”எல்லா காரியங்களும் இத்துடன் முடிந்துவிட்டது. கலைந்து செல்பவர்கள் கலைந்து செல்லலாம்.”என்று.... எல்லோரும் கலைந்து செல்கிறார்கள். இதுதானே சடங்குகளின் நிலைமை?
மாற்றங்கள் நிகழும் போக்கை நாம் பார்க்கவேண்டும் அல்லவா? இத்தகைய மாற்றங்கள், முன்பு சொன்ன சமூக சீர்திருத்த நாயகர்களின் தலையீட்டினால் ஏற்பட்டது தானே?

Image may contain: 1 person
இங்கே முன்பு மார்பு மறைக்க உரிமை இல்லை அல்லவா? அவ்வாறு மார்பு மறைக்க உரிமையில்லாத காலகட்டத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படவில்லையா? அவ்வாறு மார்பு மறைத்து, கோவிலில் நுழையும் உரிமை கிடைத்த பிறகும் கூட அந்த உரிமையை சீர்குலைப்பதற்கான போராட்டங்கள் நடக்கவில்லையா இங்கே..? பெண்களே கூட அதற்கெதிராக களமிறங்கினார்கள்...அதோடு மார்பு மறைத்தவர்களின் மாராப்பை, மார்பு மறைக்காத பெண்களே கிழித்தெறியத் துணிந்தார்கள்.
இதெல்லாம் நமது மாநிலத்தின் வரலாறல்லவா? ஆனால், நாம் அங்கேயே நின்று கொண்டிருக்கிறோமா? ‘எங்களுக்கு மார்பை மறைக்க வேண்டாம்’ என்று கூறிய பெண்களுடனா இந்த நாடு நின்றது...? காலம் அவர்களுடனா நின்றது...?காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப சடங்குகளும் வழக்கங்களும் மாறுவதில்லையா?
முன்பு, இங்கே பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது பெரிய மாற்றமாக இருக்கவில்லையா? நமது சமூகத்தின் முன்னேறிய பகுதியினர் அதனை ஏற்றுக்கொண்டார்களா? பிற்போக்கு சக்திகள் அதற்கெதிராக நிற்கவில்லையா? சுருக்கமாகச் சொன்னால், என்னென்ன சமூக சீர்திருத்த இயக்கங்கள் நடந்துள்ளனவோ அந்த கட்டங்களில் எல்லாம் அதற்கெதிராக கடுமையான எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
முன்பிருந்த நிலை என்னவாக இருந்தது? பிராமணர்களிடமிருந்து 64 அடி தூரத்தில் பறையர் நிற்க வேண்டும். 54 அடி தூரத்தில் புலையர் நிற்க வேண்டும். 36 அடி தூரத்தில் ஈழவர் நிற்க வேண்டும். ஈழவர்களிடத்திலும் தீண்டாமை வழக்கமிருந்தது. ஈழவர்களிடமிருந்து 30 அடி தூரத்தில் புலையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிற்க வேண்டும். என்னவெல்லாம் தவறான பழக்கவழக்கங்கள் நமது மாநிலத்தில் நடைமுறையில் இருந்தன? இதுபோன்ற சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலனாகத்தானே, இவையெல்லாம் மாறின? அதற்கு உறுதியான தொடர்ச்சிகளும் ஏற்பட்டன.
நமது மாநிலத்தில் மேலோங்கி வந்த பலவேறு இயக்கங்கள் விவசாயிகளின் இயக்கம், தொழிலாளர்களின் இயக்கம், இடதுசாரி இயக்கம் போன்றவற்றின் தலையீடுகள், இந்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு முன்னேறிச் சென்றன. அதுதானே இந்த மாநிலத்தை மாற்றின? இந்த மாநிலத்தின் இதுபோன்ற மாற்றங்களை உள்வாங்க முடியாத ஒரு நிலை இப்பொழுதும் உள்ளன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள் போன்றவர்களின் வரிசையில் உட்படுபவர்கள் தான் அய்யா வைகுண்டரும் பொய்கையில் குமார குருதேவனும் எல்லாம். இவர்களால், இந்த மாநிலத்தில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகள் நீங்கியதால் வந்த ஒளி தான் இப்போது கேரளத்தில் வீசுகின்றது.
நாம் அதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் எல்லோரும் ‘சடங்குகளை மீறுவதற்காகத்தான் நிலைபாடு கொண்டிருந்தார்கள்’ என்பதைத் தான். ஸ்ரீ நாராயண குரு அருவிப்புறத்தில் சிவபிரதிஷ்டை நடத்திய சம்பவம்...உண்மையில் அது ஒரு சடங்கு மீறல் அல்லவா? அப்போது “உங்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை?” என்று அவரிடம் கேட்டார்கள் அல்லவா? அதற்கு குரு என்ன பதில் கூறினார்...? “நாம் பிரதிஷ்டித்தது பிராமணர்களின் சிவனை அல்ல...நமது சிவனைத் தான் நாம் பிரதிஷ்டித்துள்ளோம்” அங்கு சடங்கு மீறல் தான் நடத்தப்பட்டது.
அதன்பிறகு, அதே குரு. “இனி கோவில்களையல்ல...பள்ளிக்கூடங்களைக் கட்டுவது தான் மக்களுக்கான தேவை” என்று தானே சொன்னார்.....அங்கேயும் சடங்கு மீறல்கள் தானே தென்படுகிறது? அப்படியென்றால், சடங்குகள் மீறப்பட வேண்டியது என்று தான் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.
அய்யன்காளியின் வில்வண்டிப் போராட்டத்தைப் பாருங்கள்...பொட்டு வைத்து, பட்டுத் தலைபாகை வைத்து, கோட்டு அணிந்து....அன்று அதற்கெல்லாம் உரிமை இருந்ததா? பொட்டு வைக்க உரிமை இருந்ததா? பட்டுத் தலைப்பாகை வைக்க உரிமை இருந்ததா? கோட்டு அணிய உரிமை இருந்ததா? அப்படியென்றால், உரிமையில்லை என்று சொன்னவர்களின் சட்டத்தோடு சேர்ந்து நிற்காமல், ‘எங்களுக்கு உரிமை உண்டு’ என்று கூறி, அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தான் நின்றார்கள்.
கடந்த வருடம் என்று தான் நினைக்கிறேன்...
இங்குள்ள ஊரூட்டம்பலம் ஆரம்பப்பள்ளிக்குச் சென்ற போது, அங்கே பாதி எரிந்துபோன பெஞ்சை நான் பார்க்க நேர்ந்தது. அது...எந்த பெஞ்சு தெரியுமா? பஞ்சமி என்ற தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுமியைப் பள்ளியில் அமரவிடவில்லை என்று கேள்விப்பட்ட போது, அந்த சிறுமியையும் அழைத்துக்கொண்டு, அய்யன்காளி தட்டிக்கேட்க வருகிறார் என்று கேள்விப்பட்ட மேல்ஜாதியினர் அந்த பள்ளிக்கே தீ வைத்தார்கள். அதில் முற்றும் எரிந்து போன பள்ளியிலிருந்து, எஞ்சிய இந்த எரிந்த, துண்டு பெஞ்சு மட்டும் கிடைத்தது. அதைத்தான் நான் அங்கு காண நேர்ந்தது. அவ்வாறு நமது மாநிலத்தில் வெவ்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. அப்படித்தான், நாம் இன்று காணும் கேரளம் உருவானது.
அத்தகைய போராட்டங்களில்...
அடையாளத்திற்காக மேல்ஜாதியினரால் அணிய வைக்கப்பட்ட கல் மாலையை அறுத்தெறிய நடத்தப்பட்ட போராட்டம்...
உடன் அமர்ந்து படிக்க நடத்தப்பட்ட போராட்டம்...
படித்த பிறகு...
வேலைகிடைப்பதற்கான போராட்டம்...
பாதையில் நடப்பதற்கான உரிமை கேட்டு நடத்தப்பட்ட போராட்டம்...
கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான போராட்டம்...
இத்தகைய வெவ்வேறு போராட்டங்கள் மூலம் தான், நாம் இன்று காணும் கேரளம் உருவானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கே பாரதிய ஜனதா கட்சி நாட்டையாளும் கட்சியல்லவா? அக்கட்சியின் நிலைபாட்டை தனியாக நாம் பரிசீலிக்கவேண்டும். மகாராஷ்டிராவில் சனி தேவனின் ஒரு திருத்தலம் உள்ளது....ஒரு கோவில். அங்கு சனிதேவன் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். சனி சிக்னாபூர் என்பது தான் அந்தக் கோவிலின் பெயர். அந்தக் கோவிலில் எக்காலத்திலும் பெண்கள் நுழைந்ததில்லை. பெண்கள் அக்கோவிலுக்குள் செல்லவே கூடாதாம். சனிதேவன் பெண்களைப் பார்க்கவே கூடாது என்பதுதான் அங்குள்ள நிலைமை. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் 'பெண்களுக்கு கோவிலுக்குள் செல்ல உரிமை உண்டு' என்று தீர்ப்பளித்தது. அங்கே பாஜக அரசு தான் உள்ளது. அவர்கள் அந்தத் தீர்ப்பை அமுல்ப் படுத்தினார்கள். இப்போது பெண்கள் அந்தக் கோவிலுக்குச் செல்கிறார்கள். அப்படியென்றால், பாஜக ஆளும் மாநிலத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தலாம். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில், இடது ஜனநாயக முன்னணி ஆளும் மாநிலத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே வந்தாலும் அமுல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். இது என்ன மாதிரியான இரட்டை நிலைப்பாடு?
அங்கே அதுபோலவே உச்சநீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பு...மும்பைக்கு அருகே ஹாஜி அலி தர்கா...அங்கே பெண்களை செல்ல அனுமதிக்கவேண்டுமென்று மனு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், நீதிமன்றம் பெண்கள் அந்த மசூதியில் செல்ல அனுமதித்தது. அந்த மசூதியில் பெண்கள் செல்கிறார்கள். இதெல்லாம் மகாராஷ்டிராவில் நடந்த விஷயங்களாகும்.
அதோடு இடதுமுன்னணி அரசு சமூக சீர்திருத்த பாரம்பரியத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டு வருகிறது. நமது கோவில்களில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பூசாரிகள் ஆகாலாம். அது, நமது தேசமே பெரும் ஆதரவளித்து வரவேற்ற ஒன்றாகும். சாதாரணமாக எல்லோரும் பூசாரிகள் ஆகிவிட முடியாது என்பது போன்ற, மேல்ஜாதி ஆதிக்கம் நிறைந்த விதிமுறைகளை எழுதியவர்கள் உட்பட எல்லோரும், “எல்லா ஆகமங்களையும் கற்றுத் தேர்ந்தால் பூசாரி ஆவதற்கு தடையேதுமில்லை” என்ற நிலைபாட்டை முன்வைத்தபோது ஏற்றுக்கொண்டார்கள். அதுபோலவே தான், அறநிலையத்துறை ஊழியர்களின் நியமனத்தில் பட்டியலினத்தவர்கள், மலைவாழ் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தினோம். உயர்வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளவர்களுக்கு, அறநிலையத்துறை ஊழியர் நியமனத்தில் தனியாக இடஒதுக்கீடு செய்யும் ஒரு முறையும் மாநில அரசு அமுல்ப்படுத்தியுள்ளது. இதெல்லாம், சமூக சீர்திருத்த மரபின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.
இங்கே காங்கிரசார் எண்ணிப்பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கட்சிக் கொடியின்றி பாஜக தலைமை தாங்கும் போராட்டத்தில் பங்கேற்றால், நீங்கள் காங்கிரஸ் அல்ல என்று ஆகிவிடுவீர்களா..? ஆமாம்...காங்கிரஸ் இல்லையென்று ஆகிவிடும் நிலை உங்களுக்கு நிச்சயம் ஏற்படும்....நாளை அவர்கள் பாஜக ஆகிவிடுவார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
காங்கிரசுடன் இணைந்து நிற்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது...அது அரசியலமைப்புச்சட்டம் பற்றிய ஆர்.எஸ்.எஸ்-ன் பார்வை ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்க்க வேண்டுமென்று தான் ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அதை அவர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இந்திய பாராளுமன்றத்திலேயே கூறிவிட்டார்கள். ஆனால் இப்போது ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த வாதத்தை காங்கிரசாரும் உயர்த்திப்பிடிக்கிறார்கள். அது, “எல்லாவற்றையும் விட உயர்ந்தது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கையே முக்கியம்....அரசியலமைப்புச்சட்டத்தின் மதிப்புமிக்க அம்சங்களை விட சட்டங்களைவிட நம்பிக்கையே முக்கியம்” என்பதாகும். இந்த வாதத்துடன் இணைந்து நிற்பவர்கள் அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை சரியான விதத்தில் புரிந்து கொண்டிருக்கிறார்களா?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த வாதத்துடன் அணிதிரள்வதாக செய்திகள் வருகின்றன. முஸ்லீம் லீக் தலைவர்களும் உணர்ச்சிவசப்பட்டு இந்த வாதத்துடன் அணிவகுக்கிறார்கள். நீங்கள் இந்த வாதத்தை கொஞ்சம் விரிவுபடுத்திப் பாருங்கள். பாபர் மசூதி விவகாரத்தில்...எங்கே போய் முடியும்? நம்பிக்கைதான் முக்கியம் எனில், இராமர் கோவில்தான் அது என்று கூறும் நம்பிக்கையோடு அல்லவா இணைந்து நின்றிருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-ம் அந்த வாதத்தோடு தான்...பாஜக-வும் அந்த வாதத்தோடு தான்... காங்கிரசும் மிகச்சரியாக அந்த வாதத்தோடு தான், அக்காலத்தில் நின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்...இந்த வாதத்தின் பின்னால் உள்ள ஆபத்து என்னவென்று சரியான முறையில் யார் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? நமது நாட்டில், சங் பரிவாரங்கள் உரிமை கொண்டாடுவது ஒரு பாபர் மசூதியின் மீது மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள ஏராளமான வழிபாட்டுத்தலங்கள் மீது அவர்களின் உரிமைவாதம் இருக்கிறது. இது எங்களது ஆராதனாலயம் என்று கூறுகின்ற உரிமைவாதத்தை முன்வைக்கிறார்கள்.
எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையிலானது என்றால் நாளைய எதிர்காலம் என்னவாகும் என்று...நிதானமாக சிந்தித்தால் போதும்...சிந்திக்க முடிந்தால்...இவ்வாறு நம்பிக்கையின்பால் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பதை மட்டும் நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்...
நாம் கவனமாகப் பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், எது அவர்களின் குறிக்கோள் என்பதே....அரசைத் திட்டுவதோ...இடதுஜனநாயக முன்னணியைத் திட்டுவதோ அல்ல...மாறாக அவர்களின் உண்மையான நோக்கம் கேரளத்தின் மதசார்பற்ற சிந்தனையைத் தகர்ப்பதே ஆகும். அதை அனுமதிக்க வேண்டுமா? என்பதே நமக்கு முன் உள்ள கேள்வி. அதை அனுமதிக்கவே முடியாது. நாம் உறுதியாக இத்தகைய முன்னெடுப்புகளை எதிர்த்து நின்று போராடியிருக்கிறோம். மதசார்பற்ற சிந்தனைகளை எதிர்க்கவும், மதசார்பற்ற எண்ணங்களை தகர்க்கவும் நடத்தப்படும் முயற்சிகளை, நாம் எல்லோரும் இணைந்து முறியடிக்க வேண்டும். மதநம்பிக்கையாளர்கள் உட்பட உள்ள அனைவரும், அதற்காக அணிதிரண்டு களத்திலிறங்கிப் போராட வேண்டுமென்று இந்நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
வாழ்த்துகள்...!

Friday, December 7, 2018

நீதிக்கட்சி

Surya Xavier
நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டாலும் அப்படியொரு கட்சி அதிகாரப் பூர்வமான பெயரோடு அன்று இல்லை.
1916 ல் டி.எம்.நாயர், நடேச முதலியார், தியாகராய செட்டியார் ஆகியோர் இணைந்து பார்ப்பனர் அல்லாதோர் கட்சியாக "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" என்ற கட்சியைத் தொடங்கினார்கள்.
அந்தக் கட்சியின் ஆங்கில ஏட்டிற்கு JUSTICE என்று பெயர். இந்தப் பெயரும் கூட லண்டனில் செயல்பட்ட சமூக ஜனநாயகக் கட்சியின் ஏடான JUSTICE என்பதிலிருந்தே உருவாக்கப்பட்டது.
அந்த பத்திரிக்கையின் பெயரை வைத்தே அதை ஜஸ்டிஸ் பார்ட்டி அல்லது நீதிக்கட்சி என்று அழைத்தார்கள். இந்த நீதிக்கட்சிக்கு பின்னாளில் தந்தை பெரியார் முழுமையாக தலைமை பொறுப்பேற்று செயல்படுத்தினார்.
இந்தப் பெயரை 1944 ல் சேலத்தில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.Image may contain: text
ஒரு பத்திரிக்கையின் பெயரை வைத்து அதுவே கட்சிப் பெயராக அறியப்பட்டது என்றால் அன்று எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று உணரலாம்.
இப்பவும் தான் பத்திரிக்கை நடத்துறாங்களே.
அம்பிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததென்று தலைப்புச் செய்தி போடுறான்.
அம்பிகாவுக்கு குழந்தை பிறந்தால் அது செய்தி அல்ல.
அம்பிகாவுக்கு ஆட்டுக்குட்டி பிறந்தால் தான் அது செய்தி.